பதிவு எண்: 851 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 120
ஏப்ரல் 30, 2021
வெற்றிக்கான சிக்னல்!
சாலைக்கு மட்டுமில்லை. வாழ்க்கைக்கும் சிக்னல் இருக்கிறது. அந்த சிக்னலில் தாழ்வு மனப்பான்மை, உயர்வு மனப்பான்மை, இயல்பு மனப்பான்மை என மூன்று விளக்குகள் உண்டு. மூன்றாவதாக உள்ள விளக்கைத் தேர்ந்தெடுத்து வாழ்ந்தால் அதுவே வெற்றிக்கான சிக்னல். மற்ற இரண்டையும் தேர்ந்தெடுக்காமல் தப்பிப்பதுகூட ஒருவகையில் வெற்றிப் பாதையில் செல்வதைப் போல்தான்.
தாழ்வு மனப்பான்மையின் சிக்னல்!
எப்போதுமே கழிவிரக்கத்தில் காலத்தைக் கழிப்பவர்கள்.
எல்லாமே இருந்தும் எனக்கு மட்டும் ஏன்தான் இப்படி நடக்கிறதோ என சதா சோகமயமாக நடமாடுவார்கள்.
என் திறமையை யாரும் கண்டுகொள்ள மாட்டேன் என்கிறார்கள் என புலம்பியபடி இருப்பார்கள்.
‘நான் நேர்மையானவன்/ள்… அதனால்தான் இப்படி கஷ்டப்படறேன்’ என நேர்மையாக இருப்பதே என்னவோ பாவகரமான செயல்போல பேசிக்கொண்டிருப்பார்கள்.
அவனுக்கு அது இருக்கு, இது இருக்கு அதனால்தான் அவனால் இந்த அளவுக்கு முன்னுக்கு வர முடிந்தது. எனக்கும் இருந்திருந்தால் நானும் எப்படியோ இருந்திருப்பேன் என ஏங்கியபடி நடமாடுவார்கள்.
எதிலும் தன்னிறைவு அடையாதவர்களாக இருப்பார்கள்.
பிறர் முன்னேறுவதைப் பார்த்து மனம் வெதும்பியபடி இருப்பார்கள்.
தான் முன்னேறாததுக்கு காரணங்களைத் தேடி கண்டுபிடிப்பதற்கு நிறைய நேரம் செலவழிப்பார்கள். முன்னேற அல்ல, எடுத்துரைக்கும் மனதை அடக்கி ‘சும்மா இரு, இதனால்தான் நான் முன்னேறவில்லை’ என காரணம் சொல்லி பொறுப்பைத் தட்டிக்கழிக்க.
பிறர் தன்னைப் பற்றியே பேசுவதாகவும், தன் முன்னேற்றத்தை தடுப்பதுதான் அடுத்தவர்கள் வேலை எனவும், அதற்காகவே சதி திட்டம் தீட்டிக்கொண்டிருப்பதாகவும் அவர்களே அவர்கள் மனதுக்குள் நினைத்துக்கொண்டிருப்பார்கள்.
அப்படி நினைத்தால்கூட ஒருவகையில் ஏற்றுக்கொண்டுவிடலாம், அதைவிட ஒருபடி மேலே சென்று தான் மிகவும் திறமைசாலியாக இருப்பதால்தான் மற்றவர்கள் தன் மீது பொறாமைகொண்டு அப்படியெல்லாம் செய்கிறார்கள் என பேசுவதுதான் வேடிக்கை.
தன்னுடைய ஐடியா தனக்குப் பலன் கொடுக்காமல் தன் நண்பருக்கு பலன்கொடுத்தால் மனதுக்குள் அழுது அழுதே காலத்தை ஓட்டுவார்கள்.
உயர்வுமனப்பான்மையின் சிக்னல்!
எப்போதுமே தன்னைப் பற்றி (மட்டுமே) உயர்வாகவே நினைத்துக்கொண்டிருப்பார்கள்.
தன்னம்பிக்கை வேறு, தான் மட்டுமே உயர்வான செயல்களை செய்கிறோம் என்று அகங்காரத்துடன் செயல்படுவது வேறு என்பதை அறியாமல் தான் மிக தன்னம்பிக்கையானவன்/ள் என பெருமை பேசுவார்கள்.
தன்னையே எப்போதும் முன்னிலைப்படுத்திக் கொண்டிருப்பவர்கள்.
என்னை யாரும் எதுவும் செய்ய முடியாதாக்கும் என ஏதோ தனக்கு பெரிய படைபலம் இருப்பதைப் போல அலட்டுவார்கள்.
நேர்மையாக இருப்பவர்களின் நேர்மையை கீழிறக்கிப் பேசி அவர்கள் குறித்து புறம் பேசுவார்கள்.
தன் திறமையால் முன்னேறுபவர்களை ‘இதெல்லாம் என்ன பெரிய விஷயம், நான் செய்யாததா?’ என மட்டம் தட்டியபடி இருப்பார்கள்.
தான் மிக உயரத்தில் இருப்பதைப் போல அடிக்கடி வாய் வார்த்தையால் சொல்லியபடி இருப்பார்கள்.
கடன் வாங்கியாவது தன் கெளரவத்தை நிலை நிறுத்திக்கொள்ளப் போராடுவார்கள்.
தன் கடமைகளை செய்வதைக் கூட ஏதோ பெரிய சாதனை செய்வதைப் போல பெருமை பேசுவார்கள். உதாரணத்துக்கு தன் பெற்றோரை தன்னுடன் வைத்துக்கொள்வதையே பெருமையாக ‘நானாக்கும் இப்படி அப்பா அம்மாவை காப்பாற்றுகிறேன்… யார் செய்கிறார்கள் இந்தக் காலத்தில்…’ என கேட்பவர்கள் அருவெறுக்கும்படி நடந்துகொள்வார்கள்.
இயல்பு மனப்பான்மையின் சிக்னல்!
வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்ந்துகொண்டிருப்பார்கள். புலம்ப மாட்டார்கள். தம்பட்டம் அடித்துக்கொள்ள மாட்டார்கள். யாரையும் கீழிறக்கிப் பேச மாட்டார்கள். நம் முந்தைய தலைமுறை பெரியவர்களை கவனித்துப் பார்த்தால் அந்த உண்மை புலப்படும்.
தாழ்வுமனப்பான்மையில் இருப்பவர்களைக்கூட வெளியில் கொண்டு வந்துவிடலாம். ஆனால் உயர்வுமனப்பான்மையில் இருப்பவர்களை மீட்டெடுப்பது மிகக் கடினம். ஏனெனில் உயர்வுமனப்பான்மைதான் மிகமோசமான தாழ்வு மனப்பான்மை.
தாழ்வு மனப்பான்மைக்கும் உயர்வு மனப்பான்மைக்கும் இடைப்பட்ட இடைவெளியில்தான் வாழ்க்கையின் வெற்றி மறைந்திருக்கிறது. அதைக் கண்டறிந்தவர்கள் பாக்கியசாலிகள்.
நான் பாக்கியசாலி. அப்போ நீங்க?
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software
#காம்கேர்_OTP, #COMPCARE_OTP