ஜம்முனு வாழ காம்கேரின் OTP-121: உங்கள் வாழ்க்கை தேவாமிர்தமாய் இனிக்க வேண்டுமா?

பதிவு எண்: 852 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 121
மே 1, 2021

உங்கள் வாழ்க்கை தேவாமிர்தமாய் இனிக்க வேண்டுமா?

‘ஆசையே அழிவுக்கு காரணம்’, ‘அத்தனைக்கும் ஆசைப்படு’ என ஆசை குறித்து இருவேறு முரண்பட்ட கருத்துக்கள் உண்டு.

ஆசை குறித்து என் கண்ணோட்டம் வேறு.

எங்கள் மாடித்தோட்டத்தில் சங்குப் பூ பூக்கிறது. நினைத்துக்கொண்டால் பறிக்கவே முடியாத அளவுக்கு அதிகமாகப் பூத்துக்குலுங்கும். சில தினங்கள் ஐந்தாறு மட்டுமே பூக்கும். சமீபமாக குறைவாகவே பூக்கிறது என்பதால் நேற்று பூப்பறித்து எடுத்துவர சிறிய டப்பாவாக எடுத்துச் சென்றேன்.

ஆனால் என்ன ஆச்சர்யம். நேற்று நிறைய பூக்கள். நான் கொண்டு சென்ற டப்பா முழுவதும் நிரம்பி வழிந்தது. வழக்கமாக நான் கொண்டு செல்லும் சற்றே பெரிய டப்பாவாக இருந்திருந்தால் அந்த டப்பாவில் கால்பாகம் கூட வந்திருக்காது. குறைவாக இருப்பதைப் போலத் தோன்றும்.

இதை கவனித்தபோது ஒரு பேருண்மை புரிந்தது. நம் ஆசைகள் பெரியதாக இருந்தால் நமக்குக் கிடைப்பவை நம் எதிர்பார்ப்புகளைவிட குறைவாகவே இருப்பதாகத் தோன்றும். அது எவ்வளவு கிடைத்தாலும். மனித இயல்பு அது.

ஆனால் நம் ஆசைகள் சிறியதாக இருக்கும்போது நமக்குக் கிடைப்பவை கொஞ்சமாகவே இருந்தாலும் அவை நம் எதிர்பார்ப்புகளைவிட அதிகமாகவே இருக்கும். பூரணத் திருப்தியும் கிடைக்கும்.

நாங்கள் படித்துக்கொண்டிருந்த காலகட்டங்களில் கார் வாங்குவது என்பதெல்லாம் மிகப் பெரிய விஷயமாக நினைத்திருந்தோம். என் அப்பா சொல்வார், ஆட்டோ வாங்கி அதை நான்குபக்கமும் கவர் செய்து காராக மாற்றிவிடலாம் என்றெல்லாம் நாங்கள் ஜாலியாக பேசிக்கொள்வோம். ஆனால் என் அப்பாவின் அதே லாஜிக்தான் இன்று ஆட்டோவைப் போல இன்ஜினை காரின் பின்னால் பொருத்தி சிறியதாக வடிவமைக்கப்பட்ட ‘டாட்டா நானோ’ மினி கார்.

எங்களின் கார் குறித்த சிந்தனை இதுதான் அதிகபட்சமாக. ஆனால் நாங்கள் படித்து முடித்து உழைப்பினால் முன்னுக்கு வர ஆரம்பித்தபோது முதன்முதலில் 1996-ல் நாங்கள் வாங்கிய கார் வெள்ளை வெளேர் என்ற மாருதி 800.

அந்தக் காரிலேயே தமிழகமெங்கும் சென்று வந்திருக்கிறோம். அப்பாவும் நாங்களும் மாறி மாறி ஓட்டிச் செல்வோம். செல்ஃப் ட்ரைவ்.

அதன் பின்னர் ஐ-10. ஒவ்வொரு ஐந்து வருடத்துக்கு ஒருமுறையும் அடுத்தடுத்த வெர்ஷனில் காரை மாற்றுவோம். எல்லாமே ஐந்து பேர் அமர்ந்து செல்லும் வகையில் எளிமையான மாடல் கார். நான்கைந்து இலட்சத்தைத் தாண்டாது.

எங்களின் கார் ஆசை இவ்வளவுதான்.

மற்றபடி கார் விலை உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்றோ, பிறர் வியக்கும் வண்ணம் இருக்க வேண்டும் என்றோ, நம் பிரிஸ்டிஜை நிலை நிறுத்தும் காராக இருக்க வேண்டும் என்றோ எந்த ஒரு போலியான நிபந்தனைகளை எல்லாம் இன்றுவரை வைத்துக்கொள்வதே இல்லை.

கார். அது பயணம் செய்ய இலகுவாக இருக்க வேண்டும். அமர்ந்து செல்ல வசதியாக இருக்க வேண்டும். ஓட்டுவதற்கு சுலபமாக இருக்க வேண்டும். நம் நாட்டின் சாலைகளுக்குப் பொருத்தமானதாக இருக்க வேண்டும்.  இவ்வளவுதான் நாங்கள் வைத்திருக்கும் நிபந்தனைகள்.

எங்களின் ஆசைகள் சிறியவை. அதனால் கிடைக்கும் பலன்கள், எங்கள் ஆசைகளைவிட பிரமாண்டமாய் உள்ளது.

எங்கள் உறவினர் ஒருவருக்கு கார் பற்றிய கனவு மிக பிரமாண்டம். தான் வாங்க முடியாவிட்டாலும் தன் பிள்ளைகள் வளர்ந்ததும் அப்படிப்பட்டக் காரைத்தான் வாங்க வேண்டும் என சொல்லிக்கொண்டே இருப்பார். எந்த புது மாடல் காரை தெருவில் பார்த்தாலும் வாய் பிளந்து அதிசயமாக பார்த்துக்கொண்டே இருப்பார் சிறு குழந்தை போல.அவரது பிரமாண்டமான ஆசைக்கு ஏற்ப பல இலட்சங்கள் கொடுத்து அவரது மகன் கார் வாங்கினார். கார் வாங்கி 2 வருடங்கள் கடந்துவிட்டன. கார் வாங்கிய அன்று பூஜைபோட அம்மா அப்பாவை அழைத்துச் சென்றதோடு சரி இன்றுவரை அவர் அந்தக் காரில் தன் அப்பா அம்மாவை அழைத்துச் சென்றதே இல்லை.

உள்ளூராக இருந்தால் ஓலா, வெளியூராக இருந்தால் ட்ராவல்ஸில் வாடகைக் கார் புக் செய்து கொடுத்துவிடுகிறார் அவர் மகன். தான் வாங்கிய விலை உயர்ந்த காரை தன் பயன்பாடுகளுக்கு மட்டும் பயன்படுத்துகிறார். அது உள்ளூராக இருந்தாலும் வெளியூராக இருந்தாலும், தன் மனைவி குழந்தைகளுக்கு மட்டும் பிரத்யோகமாக.

ஆசைகள் பிரமாண்டமாகத் தொடங்கினால், நமக்குக் கிடைப்பவை எத்தனை உயரியதாக இருந்தாலும் நம் எதிர்பார்ப்புகளை நிவர்த்தி செய்யாது அல்லது பூரண திருப்தி கிடைக்காது. ஏதோ ஒன்றை இழந்ததைப் போலவே தோன்றும்.

நினைத்ததெல்லாம் கிடைத்தாலும் ‘கிடைச்சுது… ஆனால் கிடைக்கல்ல…’ என்ற வடிவேலுவின் வசனம்போலதான் ஆசைகள் கண்ணாமூச்சி ஆட்டம் போடும்.

என்னைப் பொருத்தவரை ஆசைகளை சிறிய அளவில் வைத்துக்கொண்டால் ஏமாற்றம் இல்லாத வாழ்க்கையை வாழ்நாள் முழுவதும் அனுபவிக்கலாம். சின்ன சின்ன ஆசையில் பெரிய பெரிய மகிழ்ச்சிகளை அள்ள முடியும்.

சரி சரி, நான் பறித்து வந்த சங்குப் பூ விஷயத்துக்கு வருகிறேன்.

சிறிய டப்பாவில் கும்பாரமாய் குவிந்திருந்த சங்குப்பூக்களை ஒவ்வொன்றாக எடுத்து சுவாமிப் படங்களுக்கு வைத்துக்கொண்டிருந்த அப்பா சொன்னார் ‘சங்குப் பூ வீடுகளில் பூத்தால் அதிர்ஷ்டம்…’.

இவ்வளவுதான் வாழ்க்கை. சின்ன சின்ன விஷயங்களில் நேர்மறையை அள்ளிப் பருகுங்கள். வாழ்க்கை தேவாமிர்தமாய் இனிக்கும்.

எனக்கு நித்தம் தேவாமிர்தம் கிடைத்துக்கொண்டிருக்கிறது. என்னைச் சுற்றி உள்ளவர்களுக்கும் கொடுத்துக்கொண்டிருக்கிறேன். மகிழ்ச்சியாக வாழ்கிறேன்.

உங்களுக்கும் தேவாமிர்தம் வேண்டுமென்றால் இந்தப் பதிவை தொடக்கத்தில் இருந்து மீண்டும் ஒருமுறை நிதானமாகப் படியுங்கள். தேவாமிர்தம் கிடைப்பதற்கான வழி புலப்படும்.

வாழ்த்துகள். அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software

#காம்கேர்_OTP,  #COMPCARE_OTP

(Visited 20 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon