ஜம்முனு வாழ காம்கேரின் OTP-140: எது அவமானம்?

பதிவு எண்: 871 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 140
மே 20, 2021

அவமானப்பட வேண்டியவற்றுக்கு அவமானப்படுவோம்!

பதினெட்டு வயதேயான தன் மகன் யாரும் பார்க்கவில்லை என நினைத்து மறைந்திருந்து சிகரெட் பிடித்துக்கொண்டிருந்ததைப் பார்த்தபோது அவருக்கு முதலில் கோபம் வந்தாலும் அதை கட்டுப்படுத்திக்கொண்டார்.

காரணம் அவன் சாதாரணமானவன் அல்ல. நல்ல குறிக்கோளுடன் வாழ்பவன். சிறு வயதிலேயே தனக்கென இலட்சியங்களை வைத்திருப்பவன்.  அனிமேஷன் துறையில் உச்சத்துக்குச் செல்வதும் திரைப்படத்துறையில் அதை இணைத்துப் புதுமைகள் செய்வதுமே அவனது இலட்சியம். இப்போதுதான் கல்லூரியில் சேர்ந்திருக்கிறான் என்றாலும் அனிமேஷனின் அத்தனை விஷயங்களும் அத்துபடி. தானாகவே கற்றுக்கொண்டதுடன் அனுபவமிக்க பயிற்சியாளர்களிடமும் கற்றுக்கொண்டு வருகிறான்.

அடுத்த நாள் காலை தன் மகனை அழைத்துக்கொண்டு வாக்கிங் கிளம்பினார். அவன் அப்போதுதான் கல்லூரியில் சேர்ந்திருந்ததால் கல்லூரி வாழ்க்கை, நண்பர்கள், ஆசிரியர்கள் என எல்லாவற்றையும் பொதுவாகப் பேசிக்கொண்டே வந்தவர் ஒரு கட்டத்தில் அவனது பத்து வயதில் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்ட போது கல் இடறி கீழே விழுந்துவிட்ட நிகழ்வை நினைவு கூர்ந்தார்.

பிசியான தெருவில் சைக்கிளில் இருந்து கீழே விழுந்துவிட்டதால், அந்த அவமானம் தாங்காமல் சைக்கிளை அங்கேயே விட்டுவிட்டு வீட்டுக்கு ஓடி வந்து அப்பாவிடம் சொல்லிவிட்டு போர்வையை மூடிக்கொண்டு ஒரு மணி நேரம் படுத்திருந்தது அவனுக்கு நினைவுக்கு வந்தது. அவன் அப்பாதான் அங்கு சென்று சைக்கிளை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தார்.

‘சைக்கிளில் இருந்து கீழே விழுவது ஒன்றும் அத்தனை அவமானகரமான செயல் அல்ல. பத்து வயது சிறுவன் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொள்ளும்போது கீழே விழுவது சகஜமே. ஆனாலும் நீ அதற்காக அவமானப்பட்டாய்… ஆனால் இன்று நீ…’

அப்பா என்ன சொல்ல வருகிறார் என கொஞ்சம் குழப்பத்துடன் அவரைப் பார்த்தபடி நடந்தான் அவன்.

‘சிகரெட் பிடிப்பது உடலுக்கு கேடு. அந்த புகை உனக்கு மட்டுமில்லாமல் மற்றவர்களின் உடல் நலத்துக்கும் கேடு. இது ஒரு தவறான பழக்கமும் கூட. நீ அவமானப்பட வேண்டுமானால் இந்த வழக்கத்தை நீ பழக்கமாக்கிக் கொண்டதற்காகவே அவமானப்பட வேண்டும். ஆனால் இதற்கு அவமானப்படாமல் புகைக்கிறாய்…’

‘அப்பா…’ என தயங்கினான். குரலில் தடுமாற்றம்.

அவன் தோள் மீது கைபோட்டுக்கொண்டு அணைத்தபடி நடந்து உரையாடலைத் தொடர்ந்தார் அவன் அப்பா.

‘தவறே இல்லாத விஷயங்களுக்கு கூச்சப்படுவதும், அவமானப்படுவதும் உண்மையிலேயே அவமானப்பட வேண்டியவற்றுக்கு அவமானப்படாமல் சகஜமாக அவற்றைப் பொதுவெளியில் செய்வதும் சாதாரண மனிதர்களின் இயல்பு. நீ சாதாரணமானவனா அல்லது சாதிக்கப் பிறந்தவனா?’

‘அப்பா… இல்லப்பா…’ என்று மேலும் தடுமாறினான் அவன்.

‘நீ உன் கனவுப் பாதையில் செல்ல வேண்டிய தூரம் அதிகம் இருக்கிறது. அதற்கு உன் உடல் நலமும், மன நலனும் நன்றாக இருக்க வேண்டும். இப்படி புகைத்துக்கொண்டு உன் உடல் நலத்தைக் கெடுத்துக்கொண்டால் நீ இருக்க வேண்டிய இடத்தில் வேறொருவர் இருப்பார். நீ இல்லை என்பதற்காக அந்த இடம் ஒன்றும் அப்படியே காலியாகவே இருக்கப்போவதில்லை. உனக்கான இடத்தை நீயே வலிய பிறருக்கு தாரை வார்க்கப் போகிறாயா அல்லது நீயே ஜம்மென அமர்ந்து ஊர் உலகத்துக்கு ரோல்மாடல் ஆகப்போகிறாயா?’

அவனுக்கு தான் செய்த தவறு புரிந்தது. உண்மையிலேயே தன் செயலுக்கு அவமானப்பட்டான். தலைகுனிந்தான்.

அவன் அப்பா மேலும் இறுக்கமாக அவனது தோளை அணைத்தபடி நடந்தார்.

இப்போது அவனுக்கு அப்பா மீது பாசம் அதிகரித்தது.

எது அவமானம் என்பதை இத்தனை மென்மையாக எந்த அப்பாவாலும் சொல்லிப் புரிய வைக்கவே முடியாது என நினைத்தான். அவனும் தன் அப்பாவின் கைகளை நன்றாக அழுத்தி இனி எந்த கெட்ட பழக்கத்துக்கும் ஆளாக மாட்டேன் என சொல்லாமல் சொல்லி உத்திரவாதம் கொடுத்தான்.

இப்படித்தான் நம்மில் பலரும் பல நேரங்களில் அவமானப்பட வேண்டிய விஷயங்களை எல்லாம் துச்சமாக தூசி போல உதறித் தள்ளிவிட்டு, அவமானவே படத் தேவையில்லாத விஷயங்களுக்கு கூனிக்குறுகுவதுமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் ஒருவர் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து ரகளை செய்வார். அக்கம் பக்கத்துக்கு வீடுகளில் உள்ளவர்களுக்கு துல்லியமாக கேட்கும் அளவுக்கு அவரின் குரல் கணீரென ஒலிக்கும்.

அவருக்கு கொரோனா தொற்று. மருத்துவமனையின் சேர்க்கும் நாளன்று  அந்தத் தகவலை அவரது மனைவி தன் அப்பா அம்மாவிடமும் உடன் பிறந்தவர்களிடமும் போனில் தகவல் கொடுத்துக்கொண்டிருந்ததை பார்த்துவிட்டு ‘ஏன் இப்படி என்னை அவமானப்படுத்துகிறாய்… நான் என்ன செத்தா போய்விட்டேன்… நான் மருத்துவமனையில் சேர்வதே எனக்கு அவமானமான விஷயம். இதைவேறு ஊர் உலகத்துக்கு தம்பட்டம் அடிக்கிறாயா…’ என ‘குய்யோ முய்யோ’ என கத்தினார்.

உண்மையில் அவர் அவமானப்பட வேண்டியது வளர்ந்த பிள்ளைகள் இருக்கும் வீட்டில் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து ரகளை செய்வதற்காக. ஆனால் அதற்கு ஒருதுளியும் அவமானப்படாமல் இன்று உலகமே மாட்டிக்கொண்டு தவித்துகொண்டிருக்கும் கொரோனாவுக்காக சிகிச்சைக்கு மருத்துவமனை செல்வதை அவமானகரமான விஷயமாகக் கருதுகிறார்.

அவமானப்பட வேண்டிய விஷயங்களுக்கு அவமானப்படுவோம். இயல்பாகக் கடக்க வேண்டியதை வெகு இயல்பாகக் கடப்போம்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 1,015 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon