ஜம்முனு வாழ காம்கேரின் OTP-142: ‘Unconditional Love’ சாத்தியமா?

பதிவு எண்: 873 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 142
மே 22, 2021

‘Unconditional Love’ சாத்தியமா?

அன்பு என்பது ஓர் உணர்வு. எதிராளிக்கும் நமக்குமான உறவுமுறைக்கு ஏற்ப அதன் வடிவம் மாறும். கருணை, மனிதாபிமானம், இரக்கம், காதல் என அது பல வடிவங்களை தன்னுள் உள்ளடக்கியது. அடிப்படையில் அன்பும் பாசமும் உள்ளவர்களால் இந்த உணர்வுகளை அதனதன் எல்லைக்குள் அழகாக வெளிப்படுத்த முடியும்.

நமக்கு தீங்கு ஏற்படாத வரையில்தான் அன்பைக்கூட அதன் எல்லையைத்தாண்டி நீட்டிக்க முடியும்.

நமக்குத் தொந்திரவு கொடுக்காமல் சாரை சாரையாக ஊர்ந்து செல்லும் எறும்புகள் வீட்டுக்குள் இருந்தாலும் நாம் அவற்றை சட்டை செய்யப் போவதில்லை. ஆனால் அதுவே ஒரு ஒரு குட்டி பாம்பு அல்லது சின்ன பூரான் அறையின் மூலையில் அண்டிக்கொண்டிருக்க நம்மால் விட முடியுமா? அடித்தே கொன்றுவிட மாட்டோம்.

எறும்புக்கு ஒரு நியாயம். பாம்புக்கும் பூரானுக்கும் ஒரு நியாயமா?

இதே லாஜிக்தான் Unconditional Love என்ற விஷயத்துக்கும். ஒரு புகைப்படம். ஆக்ஸிஜன் சிலிண்டரின் உதவியுடன் சுவாசிக்கும் ஒரு அம்மா சமையல் அறையில் சமைத்துக்கொண்டிருக்கிறாள். அந்தப் புகைப்படத்துக்கு ‘Unconditional Love = Mother’ என்று பெயரிட்டிருந்தது.

இதற்குப் பெயர் ‘Unconditional Love’ அல்ல. அப்படிப்பட்ட அம்மா இயங்கும் வீட்டில் உள்ளவர்கள் ‘கையாலாகாதவர்கள்’ என்றே பொருள். அப்படிப்பட்ட சூழலில் அவரை வேலை செய்ய வைப்பது ‘Unconditional Cruality’ என்ற பிரிவின் கீழல்லவா வரும்?

நமக்கு சாதகமாக இருக்கும் வரைதான் ‘Unconditional Love’ என்ற கிரீடம் எல்லாம். அதுவே அந்த அம்மா தன் வீட்டில் உள்ளவர்களை திட்டித் தீர்த்து அவர்களை வேலை செய்ய வைத்தால் அவளுக்கான பெயரே மாறிவிடும். ‘நீயெல்லாம் ஒரு அம்மாவா?’ என்ற அளவுக்குக் கூட வார்த்தைகள் கீழிறங்கும்.

எந்த நிபந்தனையும் இல்லாமல் கேட்பது எல்லாமே கிடைத்துக்கொண்டிருந்தால் அதற்கு மதிப்பே இல்லாமல் போய்விடும். சின்ன சின்ன நிபந்தனைகள்தான் வாழ்க்கையை சுவாரஸ்யப்படுத்தும். அர்த்தமுள்ளதாக்கும்.

வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்கச் சொல்லிக்கொண்டே இருந்தோம். ஆனால் நாம் யாருமே சட்டை செய்யாமல் அவற்றை வெட்டி வீழ்த்திக்கொண்டே இருந்தோம். இன்று நாம் ஒவ்வொருவருக்கும் ஒரு ஆக்ஸிஜன் சிலிண்டர் தேவையாகிவிட்டது. ஃபேன், ஏசி போல ‘ஆக்ஸி’ என்ற சாதனமும் விரைவில் பயன்பாட்டுக்கு வரலாம். யார் கண்டது?

இந்த உதாரணம் எதற்கென்றால் ‘மரம் வளர்ப்போம்’ என்று அன்புடன் சொல்லப்படும் வார்த்தைகளை காதில் வாங்கிக்கொள்ளாத நாம் இன்று இயற்கை சீற்றத்துக்கும் அதன் மிரட்டலுக்கும் அஞ்சி நடுங்கி ஆக்ஸிஜன் சிலிண்டருக்காக துடியாய் துடிக்கிறோம். இந்த இடத்தில் மிரட்டல் அன்பை ஜெயித்துவிடுகிறதல்லவா?

ஒரு அழுத்தம், ஒரு நிபந்தனை, ஒரு கட்டாயம் உருவாகும்போதுதான் நிசர்சனம் புரிய ஆரம்பிக்கும். பல நேரங்களில் காலம் கடந்த ஜானோதயமும் பிரயோஜனமில்லை.

அன்பில் நிபந்தனையுடனான அன்பு, நிபந்தனையற்ற அன்பு என்றெல்லாம் கிடையாது. அடிப்படையில் அன்பு நம் மனதில் குடிகொண்டிருந்தால் மற்ற எல்லா குணங்களும் தானாகவே வந்து குடியேறும்.

என்னைப் பொருத்தவரை அன்பிற்கான இலக்கண இலக்கியம் இதுமட்டுமே!

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP­

(Visited 21 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon