ஜம்முனு வாழ காம்கேரின் OTP-144: விதண்டாவாதம் செய்ய வாரீகளா?

பதிவு எண்: 875 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 144
மே 24, 2021

விதண்டாவாதம் செய்ய வாரீகளா?

அடிப்படையில் நம்மிடம் அன்பு மிதமிஞ்சி இருக்குமேயானால், மற்ற எல்லா நல்ல குணங்களும் நம்மிடம் தானாகவே வந்து சேர்ந்துகொள்ளும். அதுபோலதான் நம்மிடம் உள்ள ஒரு சிறு தீய குணம் மற்ற அனைத்து தீய குணங்களையும் வெற்றிலைப் பாக்கு வைத்து அழைத்து விருந்தாளியாய் அழைத்துக்கொள்ளும்.

இதை மீண்டும் ஒருமுறை நன்கு வாசியுங்கள். இரண்டு விஷயங்கள் ஆச்சர்யப்படுத்தும். அன்பு ‘மிதமிஞ்சி’ இருந்தால் மட்டுமே மற்ற நல்ல எல்லா குணங்களும் நம்மை நோக்கி வரும். ஆனால், ஏதேனும் ஒரு தீய குணம் சிறு துளி இருந்துவிட்டால் போதும் மற்ற தீய குணங்கள் எல்லாம் வேக வேகமாக நம்மிடம் அண்டிக்கொள்ளும்.

நல்லவை பெருக பெரு முயற்சிகள் தேவையாக இருக்கிறது. தீயவை பெருக ஒரு சிறுதுளி முயற்சி இருந்தாலே அல்லது தீயவற்றை மனதால் நினைத்தால் கூட போதும். அதுவே அழையா விருந்தாளியாய் தன் உடன்பிறப்புகளையும் அழைத்துவந்து நம்மில் குடியேறும் சர்வ வல்லமை படைத்ததாய் உள்ளது.

சமீபத்தில் என் ஃபேஸ்புக் தொடர்பில் இருந்த ஒருவரை பொது அறிவிப்பு செய்து ப்ளாக் செய்தேன். விதண்டாவாதம் செய்தல், அத்துமீறி மற்ற நண்பர்களின் தனித்தகவலுக்குச் சென்று என் பதிவுகள் குறித்தும் என் குறித்தும் விமர்சிப்பது, என் பதிவுகளுக்கு மற்ற நண்பர்கள் எழுதுகின்ற பின்னூட்டங்களை தேவையில்லாமல் விமர்சித்து வீண் விதண்டாவதம் செய்து மற்றவர்களையும் குழப்புவது என நாளுக்கு நாள் அவருடைய தொந்திரவு எல்லை மீறியதால் ப்ளாக் செய்தேன்.

அவர் என் பதிவுகளின் பின்னூட்டத்தில் செய்த சில சலசலப்புகள் இருக்கும்வரை அவர் யார் யாருடன் எல்லாம் எதிர்வாதம் செய்து குட்டையைக் குழப்பினாரோ அவர்கள் எல்லோரும் வெகு குஷியாக என் பதிவுகளில் பின்னூட்டமிட்டுக்கொண்டிருந்தார்கள். வாதம், பிரதிவாதம் என ஜரூராய் பஞ்சாயத்தெல்லாம் நடக்கும். நான் தலையிட்டு வாதத்தை நிறுத்திக்கொள்ளுங்கள். உங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் உங்கள் வாத பிரதிவாதங்களையும் பஞ்சாயத்தையும் வைத்துக்கொள்ளுங்கள் என முற்றுப் புள்ளி வைப்பேன்.

நான் அந்த நபரை ப்ளாக் செய்த பிறகு, வாதம் பிரதிவாதம் செய்தவர்களும் நம் பதிவுகள் பக்கம் வருவதே இல்லை. லைக் கூட போடுவதில்லை. ஆனால் அவர்கள் தங்கள் வாதத் திறமையை மற்ற பதிவர்களின் பதிவுகளின் பின்னூட்டத்தில் தொடர்வதை காண நேரும்போது ஒன்று மட்டும் புரிந்தது.

இங்கு பலருக்கும் சும்மாவேயானாலும் ஒரு கருத்துக்கு எதிர்கருத்து சொல்லும் நபர்கள்தான் தேவையாக இருக்கிறார்கள். காரணம் அதைவைத்து வம்பு செய்து குட்டையைக் குழப்பலாம் அல்லவா?

மேலும் சமூக வலைதளங்களில் நாம் எழுதும் பதிவுகளை படிப்பவர்களைவிட, அதன் பின்னூட்டத்தில் வந்து காலரை தூக்கிவிட்டுக்கொண்டு சலசலப்பு செய்து ‘என்னைப் பார், ஒரு வார்த்தை சொந்தமாக எழுதத் தெரியாவிட்டாலும் மற்றவர்கள் எழுதுவதை எப்படி எல்லாம் விமர்சிக்கிறேன் பேர்வழி என குழப்புகிறேன் பார்…’ என்ற எண்ணம் கொண்டவர்களே அதிகம் இருக்கிறார்கள்.

இந்த மனோபாவம் கொண்டவர்கள் விதண்டாவாதம் செய்பவர்களை விடவும், அத்து மீறுபவர்களைவிடவும் மோசமானவர்கள்.

நல்லவை பெருக பெரு முயற்சிகள் தேவையாய் இருக்கிறது. ஆனால், தீய சிந்தனை ஒருதுளி இருந்துவிட்டால் அவை மடமடவென பல்கிப்பெருகி விடுகிறது என்பது குறித்து சிந்தித்துக்கொண்டிருந்தபோது இது நினைவுக்கு வந்தது.

ஒரு தீய சக்தியை அனுமதித்துவிட்டால் அது பல்கிப் பெருகும் என்பது உண்மைதான். அத்துமீறியோ அல்லது நாமே அனுமதித்தோ உள்ளே நுழைந்த அந்த தீய சக்தியை அதே வேகத்துடன் வெளியே அனுப்பினால் அது தன்னுடன் அழைத்து வந்த மற்ற தீயசக்திகளையும் சேர்த்து அழைத்துக்கொண்டு வெளியேறிவிடும் என்பது நிரூபணம்.

இதைப் புரிய வைக்க ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளப் போராளிகளையே உதாரணமாக எடுத்துக்கொண்டேன்.

நல்லவற்றையே சிந்திப்போம், நல்லவற்றையே செயல்படுத்துவோம், நல்லவற்றையே திட்டமிடுவோம். இவற்றை எல்லாம் மீறி தீயவை எட்டிப் பார்த்தால் தயக்கமே இல்லாமல் வெளியேற்றுவோம். அது ஒன்றுதான் நல்லவற்றை நம்மிடம் தக்கவைத்துக்கொள்வதற்கான ஒரே வழி!

சிந்திப்போம். செயல்படுவோம்!

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP­

(Visited 923 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon