பதிவு எண்: 876 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 145
மே 25, 2021
நீங்களும் செய்யலாமே கொரோனா காலத்து ‘நம்பிக்கை நிதி நிவாரணம்’!
என் பெற்றோர், ஓய்வு பெற்றவர்களுக்கான வாட்ஸ்-அப் குழுமத்தில் அலுவலக சம்மந்தமான விவரங்கள் வெளிவரும் என்பதால் அதில் இணைந்திருக்கிறார்கள். நல்ல விஷயம்தான். அட்மின் ஒன்லி செட்டிங்கில் அதிகம் தொந்திரவு கொடுக்காத வாட்ஸ் அப் குழுமம். மிக நன்றாகவே செயல்படுத்தி வருகிறார்கள்.
முன்பெல்லாம் மாதம் ஒன்று என வந்துகொண்டிருந்த இறப்பு செய்திகள் கொரோனாவுக்குப் பிறகு தினம் ஒன்று என்ற கணக்கில் தொடங்கி இப்போது தினம் காலையில் ஒன்று மாலையில் ஒன்று என்ற கணக்கில் முன்னேறி மறைமுகமாக அந்த குழுவில் உள்ளவர்களை எதிர்மறை எண்ணங்களுக்குள் ஆழ்த்துகிறது. குறிப்பாக என் அப்பாவை.
இறப்பு செய்திகளைவிட, இறந்தவர்களைப் பற்றி அவர்களுடன் பணி புரிந்தவர்கள் எழுதும் இரங்கல் செய்திகள் இன்னும் பாதிக்கிறது. முன்பெல்லாம் இதுபோல இரங்கல் செய்திகளை எல்லாம் அதில் பகிரமாட்டார்கள்.
இப்போது இறந்தவர்களின் நண்பர்கள் அட்மினுக்கு இரங்கல் செய்தியை அனுப்ப அவர் அதை படித்துப் பார்த்து அந்தக் குழுவில் ஃபார்வேர்ட் செய்கிறார்.
இதுபோன்ற இரங்கல் செய்திகள் நிச்சயமாக மன அழுத்தத்தையே அதிகரிக்கும். என் அப்பாவுக்கு அதிகரிப்பதை நான் கண் கூடாகப் பார்த்து வருகிறேன்.
மேலும் இப்போதெல்லாம் அந்தக் குழுவில் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தைப் பார்த்தாலே இப்போதெல்லாம் இறப்பு செய்திதான் முதலில் வயிற்றை பிசைகிறது. அந்த உணர்வே நம் மனதை தளர்ச்சி அடையச் செய்து சோர்வாக்குகிறது. எனக்கு நேரடியாக சம்மந்தமே இல்லாத அந்தக் குழுவில் பகிரப்படும் செய்திகளே என்னை இந்த அளவுக்கு பாதிக்கிறது என்றால் என் பெற்றோரைப் போன்று நேரடியாக சம்மந்தமுள்ளவர்கள் குறித்து சொல்லவா வேண்டும்?
எனவே ஒரு யோசனை தோன்றியது. என் பெற்றோரிடம் பகிர்ந்துகொண்டேன். அதை அட்மினுக்கு சொல்லச் சொல்லி இருக்கிறேன்.
அது என்ன யோசனை?
உடனடியாக முதலில் செய்ய வேண்டியது. இறந்துபோனவர்கள் பற்றிய செய்தியை மட்டும் அதில் போடலாம். உடன் பணிபுரிந்தவர்கள் எழுதும் இரங்கல் செய்திகளை முற்றிலும் தடை செய்யலாம்.
இரண்டாவது, உயிருடன் இருப்பவர்கள் குறித்து அவர்களுடனான அனுபவங்களை அதிகம் பகிரலாம். அந்தக் குழுவில் இருப்பவர்கள் தன்னுடன் பணிபுரிந்த நண்பர் அல்லது நண்பர்கள் குறித்த தகவல்களையும் அவர்களுடனான அனுபவங்களையும் சுவைபடவோ அல்லது தங்களுக்குத் தெரிந்த அளவிலோ சுருக்கமாக எழுதி ஷேர் செய்யலாம். இதன் மூலம் வாழ்ந்துகொண்டிருப்பவர்களுக்கு மனமகிழ்ச்சி உண்டாகும். அந்த மனமகிழ்ச்சி கொரோனாவினால் வீட்டுக்குள் சுருங்கி அடங்கி பயத்துடன் மீதமிருக்கும் காலத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கும் பெரியவர்களின் மன இறுக்கத்தை நிச்சயமாக கணிசமான அளவில் குறைக்கும்.
ஒருவர் எழுதி பகிர ஆரம்பித்தால் அதைப் பார்த்து மற்றவர்களும் தங்கள் இளமைகால பணி அனுபவங்களுக்குள் சென்று எழுத ஆரம்பிப்பார்கள். எல்லா விஷயங்களுக்கும் ஒரு தொடக்கப் புள்ளிதான் தேவையாக உள்ளது. அந்த தொடக்கப் புள்ளியை அப்பாவை வைக்கச் சொல்லி இருக்கிறேன்.
இந்த அனுபவ செய்தியை பகிரும்போது #பொக்கிஷ_அனுபவங்கள் என தலைப்பிட்டு யார் எழுதுகிறாரோ அவரும் யாரைப் பற்றி எழுதுகிறாரோ அவரும் சேர்ந்து இருக்கும் புகைபப்டத்தைப் பகிர்ந்துகொள்ளும் வகையில் அந்தப் பதிவு இருக்குமேயானால் அதைப் படிப்பவர்கள் மனதில் மகிழ்ச்சி நிரம்பும். மன இறுக்கம் குறையும்.
நண்பர்கள் சேர்ந்து இருக்கும் புகைப்படம் எதற்கு என்றால் நேர்மறை எண்ணத்துடன் அந்த பதிவை படிக்க ஆரம்பிப்பதற்காகவே. சேர்ந்து இருக்கும் புகைப்படம் இல்லை என்றால் தனித்தனியாக எழுதுபவர், எழுதப்படுபவர் என இருவரும் இருக்கும் புகைப்படத்துடன் ஷேர் செய்யலாம்.
இதையும் அட்மின் கண்ட்ரோலில் வைத்துக்கொள்ளலாம். தினமும் காலை, மதியம், மாலை, இரவு என நான்கு பேருக்கு மட்டும் அனுமதி கொடுக்கலாம். யார் யாரெல்லாம் தன்னுடன் பணியில் இருந்த நண்பர் குறித்து தன் மகிழ்ச்சியான அனுபவங்களை பகிர நினைக்கிறார்களோ அவர்கள் அட்மினுக்கு அனுப்பினால் அதை அவர் அந்த குழுவில் பகிரட்டுமே.
யாருக்கும் தொந்திரவு இல்லாமல், யாரையும் கஷ்டப்படுத்தாமல், ஒரு சிறுதுளி நம்பிக்கையை நம்மால் மற்றவர்களுக்குக் கொடுக்க முடிந்தால் அதுவே நாம் பெற்ற பேறு. அதுவும் ஆகச் சிறந்த அறமே. இன்றைய காலகட்டத்தில் எல்லோரும் செய்யக் கூடிய அதிகம் தேவைப்படும் அறமும் அதுவே.
அறம் செய்ய நினைப்பவர்கள் இப்படியும் செய்யலாமே! ‘அவசரகால நிதி நிவாரணம்’ போல இந்த முயற்சி கொரோனா காலத்து ‘நம்பிக்கை நிதி நிவாரணம்’.
இதற்கு பணமோ பொருளோ தேவையில்லை. நல்ல மனம் இருந்தால் போதும். யார் வேண்டுமானாலும் செய்யலாமே!
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
முக்கியக் குறிப்பு: விருப்பமும் வாய்ப்பும் இருந்தால் பின்னாளில் அந்த தகவல்களை எல்லாம் தொகுத்து புத்தகமாக்கிக் கொள்ளலாம். அனுபவங்கள் அறிவுரைகளைவிட சக்தி வாய்ந்தது. அவை உங்கள் அடுத்த தலைமுறையினருக்கு பெரும் சொத்தாக அமையும்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
#காம்கேர்_OTP #COMPCARE_OTP