பதிவு எண்: 877 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 146
மே 26, 2021
‘அன்பு – நாம் உடைந்துவிடாமல் நம்மை ஒட்ட வைக்கும் பேராயுதம்!’
நேற்று மாலை கல்கி குழும யு-டியூப் சேனலுக்கு எங்கள் காம்கேர் தயாரிக்கும் ஒரு தொடருக்கான வீடியோ ஷீட்டிங்.
‘நாம் செல்லுமிடமெல்லாம் அன்பையும் மகிழ்ச்சியையும் தூவிக்கொண்டே செல்வோமே. நாம் மகிழ்ச்சியான மனநிலையில் இருந்தால் மட்டுமே நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்களில் நல்லவை நம் கண்களுக்குத் தென்படும். மகிழ்ந்து மகிழ்வித்தல்தானே வாழ்க்கை’
நேற்று நான் ரெகார்ட் செய்த ஒரு வீடியோ பதிவின் சாராம்சம் இது. வீடியோவில் பேசும்போதே, கொரோனா கொடுங்காலத்தில் அவரவர்கள் துயரத்தில் இருக்கும்போது நாம் அன்பையும் மகிழ்ச்சியையும் பற்றி பேசுகிறோமே என்று சின்ன உறுத்தல் இருந்துகொண்டே இருந்தது.
பத்து நிமிட வீடியோதான். வீடியோ எந்த தடங்களும் இன்றி ரெகார்ட் செய்யதால் அரை மணியில் ரெகார்ட் செய்து முடித்துவிடலாம். இடையில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அதை முடிப்பதற்கான நேரம் காலவரையின்றி நீடிக்கும். எங்கள் நிறுவனத்தில் தொழில்நுட்ப லாஜிக்குடன் சேர்த்து கிரியேட்டிவிட்டியும் ஓர் அங்கம் என்பதால் அதிலும் ஆழமான அனுபவம் இருப்பதால் விரைவாக ரெகார்ட் செய்துவிட முடியும். நேற்று 20 நிமிடங்களிலேயே ரெகார்டிங் முடிந்துவிட்டது.
ரெகார்ட் செய்தவுடன் அதை டைட்டில் கார்ட், எண்ட் கார்ட், அனிமேஷன்கள் என பல இணைப்புகளை கொடுத்து பார்வையாளர்களை போரடிக்காத வண்ணம் முழுமையான தயாரிப்பாகக் கொண்டு வருவதற்கு 3 மணி நேரம்வரை கூட எடுத்துக்கொள்ளும்.
அப்படி நேற்று நான் ரெகார்ட் செய்த வீடியோவை பிராசஸ் செய்துகொண்டிருந்தபோது, எனக்குள் ஏற்கெனவே இருந்த சிறிய உறுத்தலுடன் சேர்த்து, ‘இன்று உலகமே கொரோனாவினால் பாதிக்கப்பட்டு வயது வித்தியாசமின்றி தினம் ஒரு மரண செய்திகளை கேட்டுக்கொண்டிருக்கும் இந்த வேலையில் மகிழ்ச்சியை பற்றியும் அன்பைப் பற்றியும் வீடியோ எடுக்கிறாயே. இது நியாயமா?’ என்று எனக்குள் ஏகப்பட்ட கேள்விக்கணைகள். ஆனாலும் தினம் வெளியாகும் அந்தத் தொடருக்காக ரெகார்ட் செய்ய வேண்டிய நிர்பந்தம்.
வேலையின் நடுவே ஒரு மாறுதலுக்காக ஃபேஸ்புக் சென்றேன். உடனடியாகக் கண்ணில்பட்டது அமுதசுரபி ஆசிரியர் உயர்திரு. திருப்பூர் கிருஷ்ணன் அவர்களின் பதிவு.
இவரும் நானும் சில ஆன்மிக நிகழ்ச்சிகளில் ஒரே மேடை ஏறி இருக்கிறோம். திருப்பனந்தாள் கோயில் இணையதளத்தை எங்கள் காம்கேர் மூலம் நாங்கள் வடிவமைத்தபோது புலவர் மகாதேவன் அவர்களின் முன்னெடுப்பில் திருப்பனந்தாள் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்ற திருப்பனந்தாள் கோயில் இணையதள வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நாங்கள் இருவரும் அடுத்தடுத்து உரையாற்றியது குறிப்பிடத்தக்கது.
இப்படியாக நீண்ட காலமாக நல்லதொரு புரிதல். என்னிடம் மட்டும் இல்லாமல் என் பெற்றோர் மீதும் மிகுந்த அன்பு வைத்திருப்பவர்.
கொரோனாவினால் பாதிக்கப்பட்டு இரண்டு தினங்கள் முன் மறைந்த தன் மகன் குறித்து தனக்கு ஆறுதல் சொன்னவர்களுக்கெல்லாம் நன்றி சொல்லி எழுதிய பதிவை பார்த்தவுடன் எனக்குள் இந்த நினைவலைகள்.
அவரது மகனின் வயதோ 30+. சாகும் வயதா அது?
படிக்கும்போதே மனம் கனத்தது. ஆனாலும் வியப்பின் உச்சத்துக்கே அழைத்துச் சென்றது அவரது பதிவு.
இப்படி ஒரு பெருந்தன்மையாக ஒரு மனிதரால் சிந்திக்க முடியுமா, உணர்வுகளை கட்டுக்குள் வைக்க முடியுமா என்று வெர்ச்சுவலாக அவரை அண்ணாந்து பார்த்து வணங்கினேன்.
அவரது பதிவை ஒரு முறை படித்துவிட்டு என் வேலையில் கவனம் செலுத்த முயன்றேன். முடியவில்லை. மீண்டும் பலமுறை அவரது பதிவை படித்துப் பார்த்தபடியே இருந்தேன்.
‘பத்து வயதுக்குட்பட்ட பல குழந்தைகள் தந்தை தாய் இருவரையும் கொரோனாவால் இழந்து தவிக்கும் நிலை பரிதாபம். அந்தக் குழந்தைகளுக்கு நல்லாதரவு கிடைத்து அவர்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காகவும் பிரார்த்திப்போம்.
இப்போது நடந்து கொண்டிருப்பது இதுவரை வரலாறு காணாத கொடுங்காலம். விரைவில் இந்நிலை உலக அளவில் மாறவேண்டும். கொரோனா உலகை விட்டே ஒழிய வேண்டும். இறைச் சக்தி அதை நடத்தித் தரட்டும்.
யாரை எப்போது அழைத்துக் கொள்வது என்ற இறைவன் தீர்மானத்தில் குறுக்கிடவோ விமர்சிக்கவோ நமக்கு ஏது உரிமை? இப்பிறவி பற்றி மட்டுமே நாம் அறிவோம். நம் அனைத்துப் பிறவிகளையும் அறிந்தவன் இறைவன்.
மகனை இழந்த பெருந் துயரத்தைத் தாங்கும் வலிமையை இறையருள் எனக்கும் என் மனைவிக்கும் தரவேண்டும் எனப் பிரார்த்தனை செய்ய வேண்டுகிறேன் – திருப்பூர் கிருஷ்ணன்’
அவரது பதிவில் என்னை அசைத்துப் பார்த்த சில கருத்துக்கள் இவை.
பெற்றோர் இருக்க பிள்ளைகள் இறப்பது மிகக் கொடுமை. அந்த கொடுமையான சூழலிலும் உலக ஷேமத்துக்காக வேண்டுவதற்கும், பெற்றோரை இழந்த குழந்தைகளுக்காக பிராத்திப்பதற்கும் எத்தனை உயரிய மனம் வேண்டும்.
எண்ணத்தில் தூய்மையும், தெளிவும் இருப்பவர்களால் மட்டுமே இப்படி சிந்திக்க முடியும். கூடவே அன்பையும், பெருந்தன்மையையும் கூடை கூடையாக மனதுக்குள் ‘ஸ்டாக்’ வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இந்த மனப்பக்குவம் கைவசப்படும். தேவைப்படும்போது எடுத்துப் பிறருக்கு வாரி வழங்குவதற்கு மட்டும் அல்ல, தன்னை ஆற்றுப்படுத்திக்கொள்ளவும் அதுவே உதவி செய்யும். அன்பு என்பது பிறரிடம் காண்பிப்பதற்கான உணர்வு மட்டும் அல்ல, நம்மை நாமே உடைந்துவிடாமல் ஒட்ட வைத்துக்கொள்ள உதவும் ஆகச் சிறந்த ஆயுதமும் கூட.
இந்தப் பதிவை படித்த பிறகு அன்பு குறித்து நான் ரெகார்ட் செய்த வீடியோவை எந்த உறுத்தலும் இன்றி பிராசஸ் செய்து முடித்தேன். வழக்கத்தைவிட மிக அருமையாக வந்துள்ளது.
வாய்ப்பிருப்பவர்கள் இன்று மதியம் ஒரு மணிக்கு கல்கி குழும யு-டியூப் சேனலுக்கு வருகை தாருங்கள்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
#காம்கேர்_OTP #COMPCARE_OTP