ஜம்முனு வாழ காம்கேரின் OTP-147: உள்ளே, வெளியே!

பதிவு எண்: 878 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 147
மே 27, 2021

உள்ளே வெளியே!

கொரோனாவின் வருகைக்குப் பிறகு, துணிக் கடைகளுக்கு நேரில் சென்று ஒன்றரை வருடங்களுக்கு மேல் ஆகிறது. சில உடைகள் வாங்க வேண்டும் என்பதால் ஆன்லைனில் பார்த்துத் தேடிக்கொண்டிருந்தேன். பெரும்பாலான ஆடைகளின் புகைப்படங்களுக்கு கீழே ‘The Image of the Product inide the box maybe slightly different  from actual color  due to the photo shooting.’ என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது.

‘அட்டைப் பெட்டியின் உள்ளே இருக்கின்ற பொருள் அட்டையில் பிரிண்ட் செய்துள்ளதைப் போல அப்படியே இருக்காது. கலரில் சற்று மாற்றம் இருக்கலாம். இது மாடலுக்காகக் கொடுக்கப்பட்டப் படம்’ என்பதே இதன் பொருள்.

இப்படி போடவில்லை என்றால் காசு கொடுத்து பொருளை வாங்குகின்ற வாடிக்கையாளர்கள் வெளியே உள்ள மாடலைப் போன்று எதிர்பார்த்து ஏமாந்துப் போக வாய்ப்புள்ளதல்லவா? அப்படி வாடிக்கையாளர்கள் ஏமாந்தால் கன்ஸ்யூமர் கோர்ட்டில் கூட கேஸ்போட சட்டப்படி உரிமையுள்ளது.

காசுகொடுத்து வாங்குகின்ற பொருட்களுக்கே உள்ளேயும், வெளியேயும் ஒன்றாக இல்லை என்றால் கோபம் வருகின்ற நமக்கு, உள் ஒன்று வைத்து வெளி ஒன்று பேசுகின்ற மனிதர்களுடன்தான் வாழ வேண்டியுள்ளது. அப்படிப்பட்டவர்களுடன் வாழ வேண்டிய சூழல் ஏற்படும்போது எந்த கன்ஸ்யூமர் கோர்ட்டில் கேஸ் போட முடியும்?

‘என்னவோ போங்க, யார் உண்மையா இருக்காங்க, அவங்கவங்க மனசுக்குள்ள என்ன இருக்கோ’ என அங்கலாய்ப்பவர்கள் தாங்கள் அப்படி நடந்துகொள்ளாமல் இருக்கிறோமா என்பதை ஒருநிமிடம் தன்னை நோக்கி கேள்வி எழுப்பிக்கொள்ள வேண்டும். நம்மில் பலரும் அகத்தில் ஒன்றும், புறத்தில் ஒன்றுமாகவே வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

பல நேரங்களில் மனதில் அழுக்குகளை சுமந்துகொண்டு வெளியே சுத்தமாக இருப்பதைப்போல சிரித்து ‘எப்போதடா சந்தர்ப்பம் கிடைக்கும்?’ என்று மற்றவர்களை ஏமாற்றக் காத்திருக்கும் மனிதர்கள் நம்மைச் சுற்றி ஏராளம்.

‘நான் வெளியில் தெரிவதைப் போல அத்தனை அழகான மனசுடன் இருக்க மாட்டேன். யாரும் ஏமாற வேண்டாம்’ என மனிதர்களின் தங்கள் நெற்றியில் Disclaimer போட்டுக்கொண்டு பொறுப்புத் துறப்புத் தகவலுடன் நடமாடினால் எப்படி இருக்கும் என கற்பனை செய்து பார்த்தேன். சிரிப்பு வந்தது.

கூடுமானவரை உள்ளேயும் வெளியேயும் ஒன்றாக இருக்க முயற்சிப்போம். அப்படி வாழ்பவர்களிடம் சின்னதாக வெகுளித்தனம், கூடுதலான அழகு, அதிர்வில்லாமல் வெளிப்படும் நேர்மறை அதிர்வலைகள் இவற்றை எல்லாம் நம்மால் உணர முடியும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP­

(Visited 598 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon