ஜம்முனு வாழ காம்கேரின் OTP-148: இப்படியும் ஒரு நினைவாஞ்சலி!

பதிவு எண்: 879 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 148
மே 28, 2021

இப்படியும் ஒரு நினைவாஞ்சலி!

கொரோனா கொடுங்காலத்தில் எத்தனை எத்தனையோ குழந்தைகள் பெற்றோரை இழந்து அனாதை ஆகிவிட்டனர். எத்தனையோ இளம் பெண்களும் ஆண்களும் தங்கள் துணையை இழந்துவிட்டனர். எத்தனையோ பேரின் பெற்றோர்கள் மறைந்துவிட்டனர். எத்தனையோ பேர் தங்கள் உயிர் தோழர்களை இழந்து தவிக்கிறார்கள்.

பிரபஞ்சத்தின் ஏதோ ஒரு மூலையில், நம் நாட்டின் கடைகோடியில், நாம் வாழும் ஊரில் ஓரிடத்தில் என மெல்ல மெல்ல நகர்ந்து முன்னேறிக்கொண்டே வந்து கொரோனா இன்று நம் அக்கம்பக்கத்து வீட்டைத்தட்டி விருந்து சாப்பிட்டுச் செல்வதை நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம். நம் வீட்டுக் கதவை எப்போது தட்டுமோ என்கின்ற பயத்திலும் பதட்டத்திலும் சிறு காய்ச்சல், இருமல் வந்தாலே கொரோனாவோ என்ற உயிர்பயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இவர்களுக்கெல்லாம் நாம் தனித்தனியாக Rest In Peace போட்டோ அல்லது ஓப் ஷாந்தி போட்டோ அவர்களின் துயரை துடைத்துவிட முடியாதுதான்.

ஆனால், நம் பிறந்த நாளை இந்த கொடுந்துயர் காலத்தில் ‘பொதுவில்’ கொண்டாடாமல் தவிர்க்கலாம். அது ஒன்றே நம்மைவிட்டு மறைந்தவர்களுக்கு நாம் செய்யும் நினைவாஞ்சலியாக இருக்கும்.

‘அது என்ன பொதுவில்? அப்போ வீட்டில் கொண்டாடலாமா?’ என நீங்கள் கேட்பது புரிகிறது. வீட்டில் குழந்தைகள் இருப்பார்கள். அவர்களை பதற வைக்காமல் இருக்கவும், உயிர்ப்போடு வைத்திருக்கவும் வீட்டுக்குள் நமக்குள் நம் பிறந்த நாளை கொண்டாடி மகிழலாம்.

நம் குடும்பத்தில் ஏதேனும் இறப்பு நடந்தால் ஒரு வருடத்துக்கு பண்டிகைகள் கொண்டாடமாட்டோம். ஆனால் குழந்தைகள் இருக்கும் வீடுகளில் அவர்களுக்கு மட்டுமாவது புது உடைகள் எடுத்து அவர்களுக்காக பலகாரங்கள் செய்வதுண்டு.

இதே மனிதாபிமான அடிப்படையில்தான் நான் சொல்லியுள்ள யோசனையும். சமூக வலைதள பொதுவெளியில் பிறந்த நாள் கொண்டாட்டமாக பதிவிடாமல் அவரவர்கள் இன்பாக்ஸிலோ அல்லது வாட்ஸ் அப்பிலோ சொல்லிக்கொள்ளலாமே.

ஒரு சிலர் பொது அறிவிப்பாக ‘நாளை வர இருக்கும் என் பிறந்த நாளுக்கு வாழ்த்துச் சொல்ல வேண்டாம்.’ என அறிவித்திருந்தார்கள். ஆனாலும் அவர்களுக்கு வழக்கம்போல் பிறந்த நாள் வாழ்த்து பதிவிட்டிருந்தார்கள் அவர்களின் நண்பர்கள்.

நம் பிறந்த நாள் பொதுவெளிக்கு வரவே வராமல் இருக்க ஒரு விஷயத்தை செய்துகொள்ளலாம். அதாவது, நம் சமூக வலைதள நமக்கான டைம்லைனில் பிறந்த நாள் என்ற இடத்தில் நாம் நம் பிறந்த நாளை குறிப்பிட்டிருப்போம். அதை Public என்ற செட்டிங்கில் வைத்திருப்பதால்தான் ஃபேஸ்புக் அதை மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டி நினைவூட்டுகிறது. அந்த செட்டிங்கை Only Me போட்டு விடுங்கள். அப்புறம் என்ன ஃபேஸ்புக்கும் நினைவூட்டுத் தகவலை வெளிப்படுத்தாது. உங்கள் நண்பர்களும் வாழ்த்துச் சொல்லப் போவதில்லை. முந்தைய வருடத்தில் உங்களைப் புகழ்ந்து யாரேனும் எழுதி இருந்தால் அதன் மூலம் தெரிந்துகொண்டு வாழ்த்துபவர்கள் வாழ்த்திவிட்டுப் போகட்டும்.

என்னைப் பொருத்தவரை கொரோனா கால கொடுந்துயரில் நம்மை விட்டுச் சென்றவர்களுக்கான அஞ்சலி என்ன தெரியுமா? நம் பிறந்த நாளை பொதுவெளிக்குக் கொண்டு வராமல் நம் வீட்டில் உள்ள மற்றவர்களின் மகிழ்ச்சிக்காக குறிப்பாக குழந்தைகளின் திருப்திக்காக வீட்டுடன் வாழ்த்துச் சொல்லிக்கொண்டு அமைதியாகக் கடப்பதே.

இன்றல்ல, நேற்றல்ல சமூக வலைதளங்களில் பயணிக்க ஆரம்பித்த நாள் முதலாய் என் பிறந்த நாளை (தேதி, மாதம், வருடம் உட்பட அனைத்தையும்) Only Me செட்டிங்கில்தான் வைத்திருக்கிறேன்.

இப்படி செய்யுங்கள் என நான் வலியுறுத்தவில்லை. யாரையும் புண்படுத்தவும் இல்லை. தொடர்ச்சியாக வரும் இறப்பு செய்திகளுக்கு நடுவே பிறந்த நாள் பதிவுகளை மனம் உள் வாங்கிக்கொள்ளக் கூட மறுக்கிறது. முன்பெல்லாம் தனிநபர் புகைப்படங்களுடன் பதிவைப் பார்த்தால் பிறந்த நாள் என தெரிந்துகொள்ளலாம். ஆனால் இப்போது அது அவர்களின் பிறந்தநாள் பதிவாகவே இருந்தாலும் பிறந்த நாள் பதிவு என்றோ HBD பதிவு என்றோ எழுதியே ஆரம்பித்திருந்தாலும் முதலில் கண்களுக்குப்படுவது புகைப்படம். அடுத்து மனதுக்குள் அவர்கள் குறித்த பதட்டம். ‘ஐயய்யோ, இவருக்கு என்ன ஆயிற்று்’ என்றோ ‘இவருக்குமா?’ என்றோ கொரோனாவுடன் இணைத்தே மனம் அதை உள்வாங்கிக்கோண்டு நம்மை எதிர்மறை எண்ணத்தில் ஆழ்த்துகிறது.

பலருக்கும் இப்படித்தான் தோன்றி இருக்கும். ஆனால் வெளியில் சொல்ல மாட்டார்கள்.

திரும்பவும் சொல்கிறேன். இது ஒரு யோசனையே! யாரையும் புண்படுத்தும் நோக்கில் எழுதவில்லை.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP­

(Visited 1,230 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon