ஜம்முனு வாழ காம்கேரின் OTP-149: பிசினஸ் ஜாம்பவான்கள் சரிய இதுவும் ஒரு காரணம்!


பதிவு எண்: 880 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 149
மே 29, 2021

பிசினஸ் ஜாம்பவான்கள் சரிய இதுவும் ஒரு காரணம்!

தன் பிள்ளைகளை ஆசை ஆசையாய் அவர்கள் விருப்பப்பட்டப் பாடத்திட்டத்தில் அட்மிஷன் கிடைக்க அலையாய் அலைந்து, விருப்பப்பட்ட கம்ப்யூட்டர் தொழில்நுட்பங்களுக்காக சிறப்புப் பயிற்சி வகுப்புகளில் சேர்த்து அவர்களை தொழில்நுட்ப உச்சத்தில் உட்கார வைக்க பெற்றோர்கள் எடுக்கும் முயற்சிகளின் வலிமையை வார்த்தைகளில் வடித்துவிட முடியாதுதான்.

ஆனால் அப்படி சீராட்டி பாராட்டி வளர்த்தப் பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களுக்கு வாட்ஸ் அப், ஃபேஸ்புக், யு-டியூப் போன்ற அடிப்படை அத்தியாவசிய தொழில்நுட்ப தேவைகளுக்குக் கூட அவற்றைக் கையாளப் பொறுமையாக சொல்லிக் கொடுப்பதில்லை. எங்கேனும் திருமணம் போன்ற வைபவங்களுக்கு நான் சென்றால், ‘வாட்ஸ் அப்பில் எப்படி பேசி தகவல் அனுப்புவது என்று சொல்லிக் கொடும்மா…’ என்றும், ‘யு-டியூபில் கர்நாடிக் சங்கீதமெல்லாம் கேட்கலாமாமே… எப்படி என்று சொல்றியாம்மா…’ என்றும் கேள்விகளை சுமந்தபடி கண்களில் நம்பிக்கை மின்னல்களுடன் என்னைச் சுற்றி வயதில் பெரியவர்கள் சூழ்ந்துகொள்வார்கள். இத்தனைக்கும் அவர்கள் வீட்டில் பி.ஈ, பி.டெக். எம்.டெக் என படித்த ‘ஜாம்பவான்கள்’ இருப்பார்கள். ஆனாலும் ஏன் இப்படி தவிக்கிறார்கள் என நினைத்துக்கொண்டே, நான் பொறுமையாக அவர்களின் சந்தேகங்களை புரிய வைத்த பிறகு, ‘உங்கள் பிள்ளைகளிடம் கேட்டால் சொல்லிக்கொடுத்துவிட்டுப் போகிறார்கள்…’ என சொன்னால் ‘நீ வேறம்மா, அவங்களுக்கு எங்கே அதுக்கெல்லாம் நேரம், ரொம்ப பிசி… அதுக்கெல்லாம் பொறுமை கிடையாது…’ என அங்கலாய்த்துக் கொள்வார்கள்.

இப்படி பெற்றோர்களுக்கு அடிப்படைத் தொழில்நுட்பத்தைக் கூட சொல்லித்தர மனமில்லாத பிள்ளைகள் எல்லா தரப்பு மக்களிடமும் வியாபித்து இருப்பதைக் காண முடிகிறது.

எனது 28 வருட தொழில்நுட்ப பிசினஸ் அனுபவத்தில் என் கண் முன்னே எத்தனையோ சாம்ராஜ்ஜியங்கள் மெல்ல மெல்ல அழிந்து வருவதை கண்கூடாக பார்த்துக்கொண்டிருக்கிறேன். அதுவும் இந்தக் கொரோனா கொடுங்காலத்தில் இன்னும் அதிகமாகவே.

அச்சு உலகில் கோலோச்சி இருந்த ஒரு நிறுவனம் தொழில்நுட்ப ரீதியாக முழுமையாக வடிவம் பெற புது பரிணாமம் எடுத்தபோது அவர்களால் தொழில்நுட்ப உலகில் முழுமையாக வெற்றி பெற முடியாமல் தவிக்கிறார்கள். அவர்களுக்கு தொழில்நுட்பம் தெரியாததால் அந்த வேலைக்காக கான்ட்ராக்ட் போட்டவர்கள் மட்டுமல்லாமல் வேலைக்கு அமர்த்தியவர்களும் எந்த வகையில் எல்லாம் அவர்களை ஏமாற்றலாம் என தங்கள் பங்குக்கு ஏமாற்றத் தொடங்கினார்கள். இதன் காரணமாய் அடிக்கடி வேலைக்கு புதுப்புது ஆட்களை அமர்த்தி பணத்தையும் உழைப்பையும் விரயம் செய்து கொஞ்சம் கொஞ்சமாக பிசினஸ் உச்சத்தில் இருந்து கீழிறங்க ஆரம்பித்துள்ளார்கள்.

இதற்கெல்லாம்  காரணம் அவர்கள் குடும்பத்தின் அடுத்த இளைய வாரிசுகளுக்கு பிசினஸில் விருப்பம் இல்லாமல் வெவ்வேறு வேலையில் உயர் பதவியில் அமர்ந்ததையும் சொல்லலாம்.

வேலைக்குச் செல்வது, பிசினஸில் இருப்பது என்பதெல்லாம் அவர்வர்கள் விருப்பம். ஆனால் தங்கள் குடும்ப பிசினஸின் தொழில்நுட்ப பின்னணிக்கு தங்கள் கல்வி அறிவைப் பயன்படுத்தி செம்மைப்படுத்தக்கூட ஏன் இளைய தலைமுறைக்கு மனம் வருவதில்லை என்பதே என் கேள்வி. வருத்தம். வியப்பு.

அவர்களுக்கு பிசினஸில் ஆர்வம் இல்லாவிட்டால் பரவாயில்லை. அது தவறும் இல்லை. அவர்கள் பிசினஸில் முழுமையாக இறங்க வேண்டாம். தொழில்நுட்ப ரீதியாக ஆலோசனைகள் கொடுப்பது, எப்படி வெப்சைட், ஆப் இவற்றை செம்மையாக வடிவமைப்பது, எப்படி தொழில்நுட்பப் பொறியாளர்களிடம் வேலை வாங்குவது என அடிப்படை விஷயங்களுக்காகவாவது பின்னணியில் இருந்து பெற்றோர்களுக்கு உதவலாம் அல்லவா? குறைந்தபட்சம் ஆலோசனைகளாவது கொடுக்கலாம் அல்லவா?

அதற்குக்கூட உதவ மனம் இல்லாவிட்டால் அவர்களை தொழில்நுட்பம் படிக்க வைத்து அவர்கள் விரும்பிய வேலைக்கு செல்ல அனுமதித்து அவர்கள் இஷ்டப்பட்ட வாழ்க்கைக்கு வழிகாட்டிய பெற்றோர்களுக்கு என்னதான் நன்றிக்கடன் செய்யப் போகிறார்கள்?

இப்படி சரியான வழிகாட்டல் இல்லாமல் முந்தைய தலைமுறை பிசினஸ்கள் பல தொழில்நுட்ப ரீதியாக தாக்குப் பிடிக்க முடியாமல் தள்ளாடி வருவதை பார்க்கும்போது ‘என்ன பிள்ளைகள் இவர்கள்?’ என்றே சொல்லத் தோன்றுகிறது.

வீடுகளில் தங்கள் பெற்றோர்களுக்கு தொழில்நுட்ப ரீதியாக வாட்ஸ் அப்பில் வாய்ஸ் ரெகார்ட் செய்து தகவல் அனுப்பக் கற்றுக்கொடுக்க நேரம் இல்லாத பிள்ளைகளும், பிசினஸ் குடும்பங்களில் தங்கள் குடும்ப பிசினஸுக்கு தொழில்நுட்ப ரீதியாக அடிப்படை ஆலோசனைகள் கூட கொடுக்க மனமில்லாத அல்லது விருப்பமில்லாத பிள்ளைகளும் ஒரே நேர்கோட்டில் வருகிறார்கள்.

விதிவிலக்குகள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அவர்கள் சொற்ப்பமே!

ஒரு பிசினஸூக்கு அஸ்திவாரம் போட்டு வளர்த்தெடுப்பது என்பது அத்தனை எளிதல்ல. அப்படி கடுமையாக உழைத்து வளர்த்தெடுத்த பிசினஸை உங்கள் கைகளில் பட்டைத் தீட்டிய வைரம்போல கொடுத்தால் அதை ஆசை ஆசையாய் கையில் ஏந்தி கொண்டாட வேண்டாமா? அதைவிட்டு அதை குப்பையில் போட்டு, யாரோ ஒருவர் தன்னுடைய வைரத்தைப் பட்டைத்தீட்டுவதற்கு ஆட்கள் தேடிக்கொண்டிருக்கிறார் என அவரிடம் வேலைக்குச் சேர்ந்து அவரின் வைரத்தைப் பட்டைத் தீட்டுவதில் ஐக்கியமாகிக்கொண்டால் எப்படி?

சிந்தியுங்களேன்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP­

(Visited 1,365 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon