ஜம்முனு வாழ காம்கேரின் OTP-169: எல்லோரையும் மாற்ற முடியாது, ஆனால் கையாள முடியுமே!

பதிவு எண்: 900 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 169
ஜூன் 18, 2021

எல்லோரையும் மாற்ற முடியாது, ஆனால் கையாள முடியுமே!

பொதுவாக நிர்வாகங்களில் நடைபெறும் மற்றுமொரு விஷயம் ‘அதீத அறிவாளிகள் நிராகரிக்கப்படுவது’.

கடுமையான உழைப்பாளிகளை மதிப்பார்கள். ஏன் கொஞ்சம் மூடனாக முரடனாக இருப்பவர்களைக் கூட ஏதோ ஒரு முக்கியமான இடத்தில் வைத்திருப்பார்கள். ஆனால் அதீத புத்திசாலிகள் ஒதுக்கப்படுவதை கவனித்திருப்பீர்கள்.

காரணம் என்ன தெரியுமா? அதீத புத்திசாலிகளைக் கண்டு அவர்களுக்கு லேசாக ஒரு பயம் இருக்கும். பின்னாளில் அவர்கள் தங்கள் தயாரிப்புகளின் லாஜிக்குகளை தெரிந்து கொண்டு தனியாக நிறுவனம் தொடங்கிவிடுவார்கள் என்ற ‘பொறாமை’ கலந்த பயம் இருந்துகொண்டே இருக்கும். தங்களுக்குப் போட்டியாக ஒரு நபரை தாங்களே உருவாக்க எந்த ஒரு நிறுவனமும் விரும்புவதில்லை. எப்பவுமே தாங்கள் அவர்களுக்கு சொல்லிக் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். அவர்களை திருத்திக்கொண்டே இருக்க வேண்டும். அவர்கள் டீம் லீடர் நிலைக்கு உயர்ந்துவிட்டால்கூட அவர்களுக்கு ‘முழுமையான அறிவாளி’ என்ற மன நிறைவைக் கொடுத்துவிடாமல் பயிற்சி நிலையிலேயே இருப்பதைப் போன்ற ஒரு உணர்வை, ஒரு சூழலை ஏற்படுத்திக்கொண்டே இருப்பதில் திருப்தி கொள்வார்கள்.

அதனால்தான் நீண்ட நேரம் பணிபுரியும் ‘சுமாரான’ அறிவாளிகள் கொண்டாடப்படுவதும், சில மணி நேரங்களிலேயே கொடுத்த வேலையை கச்சிதமாக முடித்துக்கொடுக்கும் புத்திசாலிகள் ஒதுக்கப்படுவதும் நடக்கிறது.

‘அதுசரி ஏன் முரடனுக்கு மரியாதை?’ என நீங்கள் நினைப்பது புரிகிறது. ஒரு நிறுவனத்தில் எப்போதுமே எல்லாமே நேர்மறையாகவே நடந்துகொண்டிருக்காது அல்லவா? சில நேரங்களில் தேவையில்லாமல் வீம்புக்காக பிரச்சனை உண்டாக்கும் வாடிக்கையாளர்களை எதிர்கொள்ள முரட்டு சுபாவம் கொண்டவர்களும் தேவைதான் அல்லவா? முரடன் என்றால் அடித்து துவம்சம் செய்யத்தான் வேண்டும் என்பதில்லை. வீம்புக்கு பிரச்சனை செய்யும் மனிதர்களும் ஒருவகையில் முட்டாள்களே. அவர்களை அவர்கள் போக்கில் சென்று கையாள்வதற்கு ஒரு முட்டாள் முரடன் மனப்பாங்கு கொண்டவன் தானே வேண்டும். அதற்காகவே அவர்களுக்கும் ஒரு இடம் உண்டு பெரிய பெரிய நிறுவனங்களில்.

ஒருமுறை எங்கள் அறக்கட்டளை மூலம் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தோம். அது ஒரு இசை நிகழ்ச்சி. பள்ளி சிறுவர் சிறுமிகளை வைத்து நடத்தினோம். இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டில் எங்களுடன் பாட்டு சொல்லிக்கொடுக்கும் ஒரு ஆசிரியையும் சேர்த்துக்கொண்டோம். அவர்களிடம் பாட்டு கற்றுக்கொள்ள வரும் சிறுவர்களை வைத்தே நிகழ்ச்சியை நடத்தினோம்.

நிகழ்ச்சி சென்னை ட்ரேட் சென்டரில் பிரமாண்டமாக நடைபெற்றது. நிகழ்ச்சியை  புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க ஏற்பாடு செய்திருந்தோம். ஏதோ ஒரு தொழில்நுட்பக் கோளாறினால் முதல் பத்து குழந்தைகள் பாடுவது மட்டுமே ரெகார்ட் ஆகி இருந்தது. கடைசி 5 குழந்தைகள்  பாடுவது ரெகார்ட் ஆகவில்லை.

அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டோம். திரும்பவும் எங்கள் நிறுவனத்திலேயே நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து வீடியோ எடுத்துவிடலாம் என்ற உத்திரவாதமும் கொடுத்தோம். ஆனால் அதில் ஒரு பெற்றோர் கோபப்பட ஆரம்பித்தார்கள். அவர்களுக்கும் அந்த பாட்டு ஆசிரியைக்கும் ஏதோ பிரச்சனை. அது புகைந்து இந்த வீடியோ விஷயத்தில் நெருப்பாய் எரிய ஆரம்பித்தது.

நாங்கள் எத்தனை பொறுமையாக நயமாக அன்பாக எடுத்துச் சொல்லியும் அந்த பெற்றோர் எகிறிக்கொண்டே இருந்தார்கள்.

‘அதெப்படி எங்கள் குழந்தை வரும்போது வீடியோ ரெகார்ட் ஆகாமல் போனது?’

‘உங்கள் குழந்தை மட்டுமல்ல, அவளைப்போலவே மற்ற 4 குழந்தைகளின் பாட்டும் ரெகார்ட் ஆகவில்லை…’

‘அதிருக்கட்டும்… என் குழந்தை என்றால் என்ன இளக்காரமா?’

‘அதெல்லாம் இல்லை… ஏதோ தொழில்நுட்பக் கோளாறு…’

‘அதெப்படிங்க, எங்க குழந்தையுடைய பாட்டு மட்டும் ரெகார்ட் ஆகாமல் போனது…’

இப்படியே விதண்டாவாதமாகப் பேசிக்கொண்டே இருந்தார்கள்.

ஒரு கட்டத்தில் ஜாதியை இழுத்தார்கள். பணக்காரர் ஏழை என்று விவாதித்தார்கள். மொத்தத்தில் முட்டாள்தனமாக விவாதம் செய்தார்கள்.

இது போன்ற சூழலை சமாளிப்பதற்காகவே நிறுவனங்களில் முட்டள் முரட்டு ஆசாமிகளுக்கும் ஏதேனும் ஒரு வேலையைக் கொடுத்து அமர்த்தி இருப்பார்கள். அவர்களால் மட்டுமே கொஞ்சம் கூட புரிதல் இல்லாமல் சொன்னதையே சொல்லிக்கொண்டு விவாதம் செய்யும் மனப்பாங்கினருக்கு இணையாக பேச முடியும்.

நாங்கள் அந்த பெற்றோரை எப்படி சமாளித்தோம் தெரியுமா?

‘இப்போ என்னதான் செய்யச் சொல்கிறீர்கள்… சொல்லுங்கள் செய்கிறோம்’ என்று சொன்னோம்.

ஆனால் அவர்களோ ‘அது எப்படிங்க எங்க குழந்தை பாடும்போது வீடியோ ரெகார்ட் ஆகாமல் போனது?’ என திரும்பவும் தொடங்கிய இடத்துக்கே வந்தார்கள்.

முத்தாய்ப்பாக ‘போலீஸில் புகார் அளிப்போம்…’ என்றபோது எங்கள் சாத்வீக குணத்தை ஒதுக்கி வைத்துவிட்டு ஒரு முடிவுடன் ‘சரி, உங்களால் என்ன செய்ய முடியுமோ செய்துகொள்ளுங்கள்… நாங்கள் சட்டப்படி எதிர்கொள்கிறோம்’ என்று சொன்னபோது கோபமாக எழுந்து சென்றார்கள். ஆனால் அவர்கள் புகார் எதுவும் கொடுக்கவில்லை. இது நடந்து 15 வருடங்கள் இருக்கும்.

ஓட ஓட விரட்டும் நாயை சட்டென நின்று திரும்பிப் பார்த்தால் மிரண்டு நின்றுவிடுமாம். பெரும்பாலான நேரங்களில் அந்த லாஜிக்கைத்தான் உபயோகப்படுத்த வேண்டியுள்ளது.

வாடிக்கையாளர்களை மதிக்க வேண்டியதுதான். ஆனால் முட்டாள்தனமாக எந்த ஒரு காம்ப்ரமைஸுக்கும் ஒத்துவராதவர்களை அவர்கள்போக்கில் சென்றுதான் வழிக்குக்கொண்டுவர முடிகிறது.

முக்கியமான விஷயம் எங்கள் நிறுவனத்தில் அறிவாளிகள், சுமாரான அறிவாளிகள் என்று இரண்டே பிரிவுகள்தான். மூன்றாவதாக நான் குறிப்பிட்டிருந்த முரடனாகவும் மூடனாகவும் இருப்பவர்களுக்கு இடம் கிடையாது.

விதண்டாவாதம் செய்பவர்களுடன் அறிவாளிகள் விவாதம் செய்ய முடியாது என்பது ஊரறிந்த ரகசியம் என்பதால், தேவைப்பட்டால் என் புத்திசாலித்தனத்தால் என் அறிவாற்றலை மறைத்துக்கொண்டு என்னை சில நிமிடங்கள் ’நானும் உன்னைப் போல சாதாரணமானவள் தான்’ என்ற உடல்மொழியுடன் பேசி விதண்டாவாதம் செய்பவர்களுக்கு பதிலடிக்கொடுப்பதுண்டு.

எப்படி எல்லாம் மனிதர்களைக் கையாள வேண்டியுள்ளது பாருங்களேன்? எல்லோரையும் மாற்ற முடியாது. ஆனால் கையாள முடியுமே.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 589 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon