பதிவு எண்: 901 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 170
ஜூன் 19, 2021
இன்று மனநலம் சார்ந்த இரண்டு கேள்விகளுக்கான பதில்கள்!
மனம் தாள முடியாத வருத்தத்தில் இருக்கும்போது என்ன செய்யலாம்?
‘வெந்நீரை குடித்துவிட்டு வெறும் தரையில் படுத்துக்கோ, எந்த சோகத்துக்கும் வடிகால் கிடைக்கும்’ என்று நம் பெரியவர்கள் சொல்லக் கேட்டிருப்போம். உண்மைதான். வெந்நீரும், வெறும் தரையும் எத்தனை சோகமிருந்தாலும் அதைவிட்டு வெளியில் வர ஏதேனும் ஒரு வழியை நமக்குக் காட்டும். அப்படியே எந்த வழியும் தோன்றவில்லை என்றாலும் நம் சோகத்தை நாம் தான் எதிர்கொள்ள வேண்டும், நம்மைத் தவிர வேறு யாருக்கும் அதை பகிர்ந்துகொள்வதற்கு உரிமையோ அல்லது கடமையோ கிடையாது என்ற உண்மை புரியும். அப்போது நம்மால் அதை எதிர்கொள்ளும் பக்குவம் கிடைக்கும். உடலை சமநிலைக்குக் கொண்டுவர வெந்நீர், மனதை சமநிலைக்குக் கொண்டுவர பாய், மெத்தை, தலையணை என்ற எந்தவித சொகுசும் இல்லாமல் வெறும் தரையில் படுத்திருத்தல். முயற்சித்துப் பாருங்களேன்.
உங்கள் சுறுசுறுப்பு குறைவதைப் போல் உணர்கிறீர்களா… என்ன செய்யலாம்?
உங்கள் மனம் ஏதேனும் ஒரு விஷயத்தில் அடிமையாக ஆரம்பித்தால் உங்கள் சுறுசுறுப்பு குறைய ஆரம்பிக்கும். அது டிவி பார்க்கும் வழக்கமாக இருக்கலாம், தின்பண்டங்கள் கொறிக்கும் பழக்கமாக இருக்கலாம், அடிக்கடி காபி டீ குடிக்கும் வழக்கமாக இருக்கலாம் அல்லது மணிக்கணக்கில் தூங்கும் பழக்கமாக இருக்கலாம்.
ஆனால் அதைவிட முக்கியமான விஷயம் இப்போது நம்மில் பெரும்பாலானோரை சோம்பேறியாக்கி வருகிறது. அது தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சகட்ட வளர்ச்சி.
ஆம். சமூக வலைதளங்களில் நித்தம் ஒரு புது வசதி இணைக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அண்மையில் முளைத்த ‘கிளப் ஹவுஸ்’ என்ற ஆப்பிற்கு அடிமையாகி வருபவர்கள் அதிகமாகிவிட்டனர். ஃபேஸ்புக், டிவிட்டர், யு-டியூப் என்றிருந்தவர்கள் தடாலடியாக கிளப் ஹவுஸே கதி என நேரம் போவதே தெரியாமல் உட்கார ஆரம்பித்து விட்டார்கள்.
வீட்டு வேலைகளை பங்கீடு செய்துகொள்ளாத ஆண்கள் கிரிக்கெட்டே கதி என நாள் முழுவதும் மேட்ச் பார்க்கும்போது வீட்டில் அவர்களுக்கு கிடைக்கும் அர்ச்சனைகளை காதுகொடுத்து கேட்க முடியாது. அதைவிட அதிக அர்ச்சனைகளை வாங்கிக்கொடுக்கிறது இந்த கிளப் ஹவுஸ். சமீபமாக இளைஞர்களை விட நடுத்தர வயதினரை அதிகம் ஈர்த்துள்ளது கிளப் ஹவுஸ்.
இப்படி அவரவர்களின் நேரத்தை தொழில்நுட்பம் பெருமளவு விழுங்கிவிடுகிறது என்றே சொல்ல வேண்டும்.
சாப்பாடு, தூக்கம், உடல் உழைப்பு இவை மூன்றும் சரிவிகிதத்தில் அமையப்பெற்றவர்களால் மட்டுமே உடலையும் மனதையும் தன் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
நினைத்த நேரத்தில் சாப்பிட்டு, நினைத்த நேரத்தில் உறங்கி, உடல் உழைப்பே இல்லாமல் ஒரே இடத்தில் காதில் ஹெட் செட்டை மாட்டிக்கொண்டு அமர்ந்திருந்தால் உடல் எப்படித்தான் சரியாக வேலை செய்யும். உடல் சரியாக வேலை செய்யாதபோது மனதுக்கு கேட்கவா வேண்டும்? மனமும் தறி கெட்டு ஓடத்தான் செய்யும். மனமும் உடலும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது. ஒன்று மக்கர் செய்ய ஆரம்பித்தால் மற்றொன்றும் மக்கர் செய்ய ஆரம்பிக்கும்.
ஃபேஸ்புக், டிவிட்டர், யு-டியூப், கிளப் ஹவுஸ் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டுமே அவை நம் வாழ்க்கைக்கு உதவுவதாக இருக்க வேண்டுமே தவிர அதுவே வாழ்க்கையாகிக் கிடந்தால் நம் இயல்பு வாழ்க்கையை இழக்க நேரிடும்.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
#காம்கேர்_OTP #COMPCARE_OTP