பதிவு எண்: 902 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 171
ஜூன் 20, 2021
தன்னம்பிக்கையாக வாழ்வதற்கு என்ன செய்ய வேண்டும்?
பெரிதாக எந்த பயிற்சியையும் எடுத்துக்கொள்ள வேண்டாம். ஒரே ஒரு சின்ன விஷயத்தில் கவனமாக இருந்துவிட்டால் போதும். உங்கள் தன்னம்பிக்கை ஜிவ்வென ஏறும்.
வீட்டில் தம் வேலைகளை தாமே செய்துகொள்ளும் மனநிலையை கொண்டவர்கள்தான் அதிகபட்ச தன்னம்பிக்கைக் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இன்றும் பல வீடுகளில் ஒரு டம்ளர் தண்ணீருக்கும், ஒரு டம்ளர் காபிக்கும் மனைவியை எதிர்நோக்கிக் காத்திருக்கும் ஆண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் துர்பாக்கியசாலிகள். அவர்களைப் போன்ற ஆண்கள்தான் மனைவியின் மறைவுக்குப் பிறகு தான் பெற்ற பிள்ளைகள் வீட்டில் கூட வசிக்க முடியாமல் திண்டாடுவார்கள்.
நம் குழந்தைகளுக்குக் கூட சின்ன வயதிலேயே தங்கள் வேலைகளை தாங்களே செய்துகொள்ளப் பழக்கினால் அவர்கள் வளரும்போதே மிக தன்னம்பிக்கையுடன் வளருவார்கள்.
தூங்கி எழுந்ததும் தன் போர்வையை மடித்து வைப்பது, படுக்கை தலையணை போன்றவற்றை ஒழுங்காக அதனதன் இடத்தில் வைப்பது முதல் காபி சாப்பிட்ட டம்ளரை தேய்த்து வைப்பது, சாப்பிட்ட தட்டை தேய்த்து வைப்பது, தங்கள் துணிமணிகளை தாங்களே துவைப்பது, மடித்து வைப்பது என ஆரம்பித்து வளர வளர அவர்களுக்கான தேவைகளை அவர்களே செய்துகொள்ளப் பழக்கினால் பின்னாளில் வீட்டில் மட்டுமில்லாமல் பொது இடங்களிலும் பணியிடத்திலும் தங்களுக்கான தனி முத்திரையுடன் திகழ்வார்கள். பிறரை வழிநடத்தும் பொறுப்பான நல்லதொரு தலைமையாக உருவாவார்கள். மொத்தத்தில் நல்லதொரு குடிமகனாகத் திகழ்வார்கள். நான் சொல்லும் இந்த வழிமுறை ஆண்குழந்தைகள் பெண்குழந்தைகள் என்ற பாகுபாடு இல்லாமல் இருபாலருக்கும்தான்.
இப்படிச் செய்வதால் குழந்தைகளைக் கொடுமைப்படுத்துவதாய் நினைக்க வேண்டாம். வீட்டில் ‘பழக்கினால்’ வெளியில் கொண்டாடப்படுவார்கள். வீட்டில் ‘தாங்கினால்’ வெளியில் மிதிபடுவார்கள். எது நல்லது என நாம்தான் முடிவெடுக்க வேண்டும்.
குழந்தைகளைப் பழக்குவது அத்தனை சுலபமல்ல. மற்ற குழந்தைகளுடன் தங்களை ஒப்பிட்டு வருத்தப்படுவார்கள். தங்கள் நண்பர்கள் வீட்டில் அப்பா அம்மாதான் எல்லா வேலைகளையும் செய்து தருகிறார்கள். நம் வீட்டில் நம் அப்பா அம்மா இப்படி நம்மை வேலை வாங்குகிறார்களே என மனதுக்குள் குமைவார்கள். பல நேரங்களில் சண்டை போடுவார்கள். அழுது ஆகாத்தியம் கூட செய்வார்கள். கண்டு கொள்ள வேண்டாம். உங்கள் கடமை சொல்லிகொண்டே இருப்பது. அவர்கள் கடமை கேட்டு அதன்படி நடக்க வேண்டும். அவர்கள் கேட்கபதில்லை என்பதாலோ, புலம்புகிறார்கள் என்பதாலோ நீங்கள் சொல்வதை நிறுத்தினால் பாதிக்கப்படுவது உங்கள் பிள்ளைகளே. எனவே உங்கள் கடமையை நீங்கள் செய்துகொண்டே இருங்கள். அவர்கள் புலம்பிக்கொண்டாவது உங்கள் சொல்பேச்சை கேட்கட்டும். ஒரு கட்டத்தில் அவர்கள் உங்களைப் புரிந்துகொள்வார்கள்.
ஆதரவற்றோர் இல்லங்களில் வளரும் குழந்தைகளை கவனியுங்கள். விடியற்காலையில் விழிப்பு, பிறகு சிறிய தியானம், சாப்பிடும் முன்னர் சிறு பிராத்தனை, சாப்பிட்ட பின்னர் முறை வைத்துக்கொண்டு அந்த இடத்தை சுத்தம் செய்வது, தங்களுடன் தங்கியிருக்கும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உதவுவது, தோட்ட வேலை அப்படி இப்படி என படிப்புடன் சேர்த்து அத்தனை நல்ல விஷயங்களையும் கற்றுக்கொடுத்திருப்பார்கள். மிகக் நேர்த்தியான சட்ட திட்டமாக வகுத்திருப்பார்கள்.
வீட்டில் நம் குழந்தைகளை பள்ளிக்குக் கிளப்புவதற்காக எழுப்புவதற்கே பிரம்மப்பிரயத்தனம் செய்ய வேண்டி இருக்கும். ஆனால் ஆதரவற்றோர் இல்லங்களில் ஒரு குரல் கொடுத்தால் சுவிட்ச் போட்டாற்போல அத்தனை குழந்தைகளும் விழித்துக்கொள்வார்கள்.
ஒரு குழந்தையையே கட்டுப்படுத்த முடியாத நமக்கெல்லாம் அவர்களின் அணுகுமுறை வியப்பையே தரும். ஆனால் கொஞ்சம் மெனக்கெட்டால் அந்த ஒழுங்குமுறையை வீடுகளிலும் கொண்டுவந்துவிடலாம்.
முன்மாதிரியாக பெரியோர்கள் இருக்க வேண்டும். வீட்டில் வேலையே செய்யாத அப்பாவைப் பார்த்து வளரும் குழந்தைகளுக்கு வேலைகளை சொல்லிக் கொடுத்து வளர்ப்பது என்பது சற்று கடினம்தான். ஆனால் அதையும் புரிய வைத்து தன்னுடைய வேலைகளை பிறர் செய்வது அல்லது செய்ய வைப்பது மிக கேவலம் என்ற பேருண்மையை உணர வைத்துவிட்டால் நீங்கள் ஜெயித்துவிட்டீர்கள் என்றே அர்த்தம்.
அமெரிக்கா போன்ற மேலைநாடுகளில் சமைத்து வைத்த சாப்பாட்டை மற்றொருவர் பரிமாறுவது கூட அவர்களுக்கு மரியாதைக்குறைவான செயல். தாங்களே எடுத்து பரிமாறிக்கொண்டு சாப்பிடுவதுதான் அவர்களுக்கு கெளரவமான செயலாகக் கருதுவார்கள். அதாவது தங்கள் வேலைகளை மற்றொருவரை செய்ய வைப்பது அவர்களைப் பொருத்தவரை இழுக்கு. அதனால்தான் அங்கு பெரிய பெரிய பதவியில் இருப்பவர்கள் கூட ஈகோ இல்லாமல் அலுவலக ரீதியாகவும் தங்கள் தேவைகளை தாங்களே செய்துகொள்வார்கள்.
ஒருமுறை நாங்கள் எங்கள் நிறுவனம் மூலம் ‘இந்திய நாட்டு உயர்கல்விக்கும், அமெரிக்க நாட்டு உயர்கல்விக்குமான ஒப்பீடு’ என்ற ஆவணப்படத்தை அமெரிக்காவில் புகழ்பெற்ற மிசெளரி பல்கலைக்கழகத்தில் படம்பிடித்தபோது அந்தப் பல்கலைக்கழக சி.ஈ.ஓ நாங்கள் காத்திருந்த கேபினுக்கு வந்து மிகுந்த மரியாதை கொடுத்து எங்களை அழைத்துச் சென்றது, அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்தது, தானே கார் ஓட்டியது, காரில் இருந்து இறங்கி மற்றொரு இடத்துக்குச் சென்றபோது தன் அலுவலக சூட்கேஸை தானே எடுத்துச் சென்றது என அத்தனையிலும் ஒரு தன்னம்பிக்கை. ஒரு மிடுக்கு தென்பட்டது. காரணம் அவரது பணியை அவரே முழு ஈடுபாட்டுடன் செய்ததே.
கார் கதவை திறந்துவிட ஒரு நபர், தன் அலுவலக சூட்கேஸை எடுத்துவர ஒரு நபர், தண்ணீர் வேண்டுமானால் டேபிளில் கைக்கு எட்டும் தூரத்தில் இருக்கும் தண்ணீர் பாட்டிலை எடுத்து குடிக்கவே அதிகாரக் குரல் கொடுத்து தண்ணீரை டம்ளரில் ஊற்றித்தர ஒரு நபர், வீட்டில் இருந்து கொண்டு வந்திருக்கும் தன் மதிய சாப்பாட்டு டிபன் கேரியரை திறந்து தண்ணீர் எடுத்து வைக்க ஒரு நபர் என தங்கள் ஒவ்வொரு தேவைக்கும் பிறரை நம்பி இருக்கும், பிறர் மீது ஆளுமை செய்யும் தலைமைகளையே பார்த்துப் பார்த்துப் பழகிப் போன நமக்கு அமெரிக்காவில் உள்ள பெரிய பெரிய தலைமைகளின் எளிமை வியக்க வைக்கும்.
ஒரு முறை நல்ல மழை. ஒரு சாஃப்ட்வேர் நிறுவத்தின் தலைவர் குடை பிடித்துக்கொண்டு ஒரு கேம்பஸில் இருந்து மற்றொரு கேம்பஸுக்கு நடந்து செல்கிறார். அது ஒன்றும் பெரிய விஷயமில்லை. வழியில் மழைக்காக ஒதுங்கிக் காத்திருந்த ஒரு பணியாளரையும் ‘வருகிறீர்களா?’ என அழைத்து தன் குடையில் அவருக்கும் இடமளித்து அழைத்துச் சென்றார். குறிப்பாக தானே குடை பிடித்து வந்தார். பணியாளரை குடைபிடிக்க விடவில்லை. அவர் ஒரு நிறுவனத்தலைவர். அவரே அந்த நிறுவனத்தின் நிறுவனரும்கூட. ஆனாலும் எந்த ஈகோவும் இல்லாமல் இப்படிப் பழகும் பண்பு அவருக்கு எப்படி வந்தது? இது நடந்ததும் அமெரிக்காவில்தான்.
தன் வேலையை தானே செய்துகொள்ளும் தற்சார்பு குணம் கொடுக்கும் Add-on குணம் இது.
தற்சார்புடன் வளர்க்கப்படும் குழந்தைகளுக்கு தன்னம்பிக்கை மட்டுமல்ல, மரியாதை கொடுத்தல், ஈகோ துறத்தல், பரந்த மனப்பான்மை, கருணையுடன் நடந்துகொள்ளுதல் என எத்தனையோ குணநலன்கள் தானாகவே விரும்பி வந்து ஒட்டிக்கொள்ளும்.
நாங்கள் அப்படித்தான் வளர்ந்தோம். எங்களை அப்படித்தான் வளர்த்தார்கள் எங்கள் பெற்றோர்.
இன்று தந்தையர் தினம். 2007-ம் ஆண்டு நாங்கள் தயாரித்த ‘அன்புள்ள அப்பா அம்மாவுக்கு’ என்ற ஆவணப்படத்தில் என் அப்பாம்மா பற்றி அவருடன் பணியாற்றிய நண்பர் என்ன சொல்லி இருக்கிறார் என பாருங்களேன்.
https://youtu.be/G4rAsFRsZrA. இது 1-1/2 மணி நேர ஆவணப்படத்தின் ஒரு சிறு பகுதியே.
முழுமையான ஆவணப்படத்தை பார்க்க விரும்புபவர்கள்: https://youtu.be/k0CFnRpqjnk
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
#காம்கேர்_OTP #COMPCARE_OTP