ஜம்முனு வாழ காம்கேரின் OTP-188: நல்லவற்றை நேசிப்போமே!

 

பதிவு எண்: 919 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 188
ஜூலை 7, 2021

நல்லவற்றை நேசிப்போமே!

கொரோனா உச்சம் தொட்ட கொடுங்காலத்திலும் அதற்குப் பிறகான காலகட்டத்திலும், என் பதிவுகளை தொடர்ச்சியாக வாசித்து வரும் அன்பர்கள் அனைவரின் அன்புக்கும் தலைவணங்குகிறேன்.

ஒருசிலர் தொடர்ச்சியாக சில நாட்கள் என் பதிவுகள் பக்கம் வராமல் இருந்தால், அவர்கள் நலன் அறிய அவர்கள் டைம் லைனுக்குச் சென்று பார்ப்பேன்.

ஒருசிலர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பார்கள். இன்னும் ஒருசிலர் கொரானவினால் இறந்து போயிருப்பார்கள். இன்னும் ஒருசிலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்ந்திருப்பார்கள்.

இவை அனைத்துமே மெசஞ்சரில் நலன் விசாரிக்கும்போது தெரிய வரும்.

தொடர்ச்சியாக என் பதிவுகளை வாசிப்பவர்கள் நலன் அறிய வேண்டும் என்கின்ற ஒரு மனிதாபிமானத்தின் அடிப்படையிலான செயல்பாடே இது. அதைக் கூட செய்யவில்லை என்றால் நம்மை மதிப்பவர்களுக்கு நாம் எந்த வகையில் மரியாதை கொடுத்துவிட முடியும்? சொல்லுங்கள்.

கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்ந்திருந்த துயரமான நிலையிலும் தொடர்ச்சியாக என் பதிவுகளை வாசிப்பவர்கள் எனக்குத் தனித்தகவலில் தகவல் கொடுத்திருக்கிறார்கள். எழுத்தை சிலாகித்திருக்கிறார்கள். நல்ல வடிகாலாக இருப்பதாக மனம் நிறைய வாழ்த்தி இருக்கிறார்கள்.

ஒரு சிலர் மருத்துவமனையில் இருந்து ‘இனி பத்து பதினைந்து நாட்களுக்கு பதிவுகளை வாசிக்க முடியாது. மன்னிக்கவும்’ என தகவல் கொடுத்திருக்கிறார்கள்.

கொரோனாவினால் இறந்தவர்களுக்கு மட்டும் போன் செய்து அவர்கள் வீட்டாரிடம் பேசி இருக்கிறேன். அவர்கள் வீட்டினரும் என்னைப் பற்றி அறிந்து வைத்திருப்பதுதான் அந்த சோகமான நேரத்திலும் வியப்பை தந்தன. என் எழுத்தின் தீவிர வாசகர்கள், அந்த அளவுக்கு என் எழுத்தை சிலாகித்து தன் பிள்ளைகளுக்கும், கணவன் / மனைவிக்கும் மிக உயர்வாக சொல்லி வைத்திருப்பது ஆச்சர்யம் மட்டுமல்ல. கொடுப்பினை.

ஆனால் யாருக்குமே தனக்குக் கொரோனா, அதனால் சிகிச்சையில் இருக்கிறேன் என்று சொல்லக் கூட தயக்கம். அதனால் அவர்கள் என்னிடம்  ‘பொதுவில் யாருக்கும் தெரியவேண்டாம் மேடம்’ கேட்டுக்கொள்வார்கள். ஆகவே, நானும் பொதுவெளியில் கொரோனா வந்தவர்கள் குறித்தும், சிகிச்சைப் பெறுபவர்கள் குறித்தும், கொரோனாவினால் இறந்தவர்கள் குறித்தும் எதுவும் பதிவிடுவதில்லை.

இப்போதுகூட தொடர்ச்சியாக என் பதிவுக்கு விசிட் செய்யும் இரண்டு அன்பர்கள் கொரோனா சிகிச்சையில் இருக்கிறார்கள். எனக்குத் தனித்தகவலில் சொல்லி உள்ளார்கள். ஆனாலும் தினமும் விசிட் செய்கிறார்கள். லைக் இடுகிறார்கள். அதெல்லாம் எனக்கு ஆச்சர்யமான விஷயம்.

இப்படித்தான் இறப்பதற்கு முதல் நாள்வரை என் பதிவை வாசித்து லைக் இட்டு, தனித்தகவலுக்கு வந்து, ‘மருத்துவமனையில் இருந்தாலும் தொடர்ச்சியாக வாசித்து வருகிறேன். என்றாவது நான் படிக்கவில்லை என்றால் தவறாக நினைக்க வேண்டாம்… சிகிச்சை முடிந்து வந்ததும் உங்கள் டைம்லைன் சென்று எல்லாவற்றையும் வாசித்துவிடுவேன்’ என்று பாராட்டிவிட்டுச் சென்றவர்கள் அடுத்த நாளே இறந்தும் போயிருக்கிறார்கள். அதுதான் கொடுமை.

இப்படி கொடுந்துயரமான காலகட்டத்திலும் என் எழுத்தை நேசித்து வாழ்த்திவிட்டு மறைந்தவர்களுக்கும், இப்போதும் நாள் தவறாமல் வாசித்து வருபவர்களுக்கும், வாசித்து லைக் செய்பவர்களுக்கும், வாசித்து லைக் செய்து கமெண்ட் செய்பவர்களுக்கும், மற்றவர்களுக்குப் பகிர்பவர்களுக்கும், வீட்டில் தன் அடுத்தத் தலைமுறையினருக்குக் கடத்துபவர்களுக்கும் நான் தலைவணங்குகிறேன்.

‘எழுத்து பெரிதாய் என்ன செய்துவிடப் போகிறது?’ என கேட்பவர்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். பொழுதுபோக்கிற்காக அல்லாமல் உண்மையில் ஊடுருவி வாசிப்பவர்களால் இறக்கும் தருவாயிலும் வாசிக்காமல் இருக்க முடியாது என்பதை என் வாசகர்கள் பலர் நிரூபணம் செய்துள்ளார்கள்.

சிலருக்கு வடிகாலாக, சிலருக்கு வழிகாட்டியாக, சிலருக்கு ஆறுதலாக, சிலருக்கு ஆதராவாக, சிலருக்கு பேரன்பாக, சிலருக்கு ஊக்கமாக என ஏதேனும் ஒரு வகையில் என் எழுத்து கைக்கொடுக்கிறது என்பதை அறியும்போது நான் இன்னமும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற உத்வேகம் உண்டாகிறது. அனைவருக்கும் நன்றி.

இந்த வரிசையில் கொஞ்சமும் பொருந்தாமல் Odd Man Out ஆக ஒரு சிலரும் இருக்கிறார்கள்.

சில மாதங்களுக்கு முன்னர் வயதில் பெரியவர் என்ற ஒரே காரணத்தை அட்வான்டேஜாக வைத்துக்கொண்டு கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் என் கருத்துக்களுக்கு எதிர்வினை ஆற்றியதுடன் என் பதிவுகளின் தீவிர வாசகர்களிடமும் அத்துமீறி நடந்துகொண்டதால் அவர் பெயரைக் குறிப்பிட்டே அவரை ப்ளாக் செய்திருந்தேன்.

அதன் பிறகு ஐந்தாறு வாசகர்கள் திடீரென என் பதிவுகள் பக்கம் வராததால் என்னவென்று உண்மையான அக்கறையில் அவர்கள் டைம்லைன் சென்று பார்த்தேன். அன்-ஃப்ரண்ட் செய்துவிட்டு சென்றிருந்தார்கள்.

அதன் பின்னர்தான் தெரிந்தது அவர்கள் அனைவருமே அந்த பெரியவருக்கு ‘ஜால்ரா’ அடிப்பவர்கள். அவர் என் பதிவுகளில் எதிர்வினை ஆற்றி வந்ததை ரசித்து மகிழ்ந்திருக்கிறார்கள். அவரை நீக்கியவுடன் தாங்களாகவே விலகிக்கொண்டார்கள்.

இது எப்படி எனக்குத் தெரியும் என்றால் அவர்கள் அனைவருமே ‘பெரியவர்தானே சொன்னால் சொல்லிவிட்டுப் போகட்டும்… போனால் போகிறது என்று விடக் கூடாதா?’ என நான் அந்தப் பெரியவரை நீக்கியபோது ரெகமெண்டேஷனுக்கு வந்தவர்கள்.

இன்னும் சொல்லப் போனால் அவர்களில் பெரும்பாலானோர் பிள்ளைகளின் வேலை, கல்விக்கான ஆலோசனைகளுக்கு, தொழில்நுட்ப சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்வதற்கு, பிள்ளைகளின் திருமணத்துக்காக ஜாதகம் பார்ப்பதற்கு என என்   ‘உதவி’-யை நாடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தெரிந்தோ, தெரியாமலோ தவறு செய்பவர்களுக்கு ஒரு முறை மறைமுகமாக சொல்லலாம். இரண்டு முறை நேரடியாக சொல்லலாம். ஆனால் எதற்குமே அசைந்துகொடுக்காமல் தொந்திரவுக் கொடுத்துக்கொண்டே இருந்தால் விலக்கி வைப்பதுதான் ஒரே வழி.

ஒரு கூடை ஆப்பிளில் ஒரு ஆப்பிள் சற்றே ஒருமுனையில் அழுகி  இருந்தால் கூட அது அத்தனை ஆப்பிள்களையும் அழுகச் செய்துவிடும் என்பது இயற்கை. அது நடக்காமல் இருக்க வேண்டுமானால் அவ்வப்பொழுது களை எடுப்பதைத் தவிர வேறு வழியே இல்லை.

என் கொள்கைகளின் நேர்மை பிடிக்காதவர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன். யாரும் கஷ்டப்பட்டுக்கொண்டு நட்புத் தொடர்பில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. என் நேர்மையையும், உறுதியையும், தன்னம்பிக்கையையும் எதிர்கொள்ள முடியாதவர்கள் தாராளமாக விலகலாம். தவறே இல்லை.

அதுபோல இன்னொரு விஷயத்தையும் சொல்லிக்கொள்கிறேன். நான் ஃபேஸ்புக்கில் காலை 6 மணிக்கு பதிவிட்டு வாக்கிங் கிளம்பி விடுவேன். அப்போது என் பதிவுகளுக்கு வரும் பின்னூட்டங்களுக்கு லைக் செய்வேன். கருத்து தெரிவிக்க வேண்டிய அவசியம் இருந்தால் தெரிவிப்பேன். மற்றபடி ஃபேஸ்புக்குக்கு வரும் நேரம் மிகக் குறைவு. மற்றவர்கள் பதிவுக்கு மாற்றுக் கருத்தோ அல்லது விருப்பக் கருத்தோ சொல்வது மிக மிக அரிது. நேரம் இருக்காது. ‘நிறுவனப் பொறுப்பு’ என்பதுதான் உண்மையான காரணம்.

ஆனால் என் பதிவுகளுக்கு வரும் பின்னூட்டங்களுக்கு அன்றைய தினத்துக்குள் நிச்சயம் மதிப்பளிப்பேன். கருத்தளிப்பேன். நன்றி தெரிவிப்பேன்.

எனவே என்னைப் புரிந்துகொண்டு என் எழுத்தைப் பின் தொடரும் அனைத்து அன்பர்களுக்கும் மீண்டும் என் அன்பும் நன்றிகளும்!

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 922 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon