‘கண்ணதாசன் பதிப்பகம்’ காந்தி கண்ணதாசன்

2017 – எங்கள் காம்கேர் நிறுவனத்தின் சில்வர் ஜூப்லி ஆண்டு.

இதை ஒரு நாள் விழா வைத்து கொண்டாடிவிடாமல் இந்த வருடம் முழுவதும் என் புரொஃபஷனில் என்னுடன் பயணித்த அத்தனை நல்லுள்ளங்களையும் நேரில் சந்திக்க நினைத்து அதை செயல்படுத்திக்கொண்டிருக்கிறேன். அந்த வரிசையில் திரு.காந்தி கண்ணதாசன் அவர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு.

1992-களில் எங்கள் காம்கேர் சாஃட்வேர் நிறுவனத்தின் மூலம் நாங்கள் சாஃப்ட்வேர் தயாரித்தல், அனிமேஷன் படைப்புகளை உருவாக்குதல் போன்றவற்றில் முதன்மையாகவும் வெற்றிகரமாகவும் இயங்கிக்கொண்டிருந்த நிலையில், ஒரு நிர்வாகியாக மட்டும் இல்லாமல் படைப்பாளியாகவும் தமிழிலும், ஆங்கிலத்திலும் புத்தகங்கள் எழுதி வெளியிட ஆரம்பித்திருந்த காலகட்டத்தில் கண்ணதாசன் பதிப்பகத்தில் இருந்து திரு.காந்தி கண்ணதாசன் மூலம் புத்தகங்கள் எழுதி வெளியிடும் வாய்ப்பு கிடைத்தது.

இன்றைய லேட்டஸ்ட் கம்ப்யூட்டர் மொழிகளுக்கெல்லாம் அத்தியாவசியமானதும், இன்று சாஃப்ட்வேர் துறையில் கொடிகட்டிப் பறக்கும் பல்வேறு சாஃப்ட்வேர்களுக்கெல்லாம் அடிப்படையான C#.NET, VB.NET, C++ போன்ற சாஃப்ட்வேர்களுக்கு நான் எழுதிய புத்தகங்களுக்கு  2000-களிலேயே  சிடியில் விளக்க கையேடும் வெளியிடும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தது கண்ணதாசன் பதிப்பகம். நானறிந்தவரை, முதன் முதலில் தமிழில் தொழில்நுட்ப நூல்களுடன் சிடியில் விளக்கக் கையேட்டில் மாதிரி புரோகிராம்களையும், ப்ராஜெக்ட்டுகளையும் இணைத்து வெளியிட்டது கண்ணதாசன் பதிப்பகம்தான்.

‘தமிழில் அதிக அளவில் கம்ப்யூட்டர் நூல்களை எழுதிய ஒரே எழுத்தாளர்’ என்றும், ‘நிறைய படங்களுடன் அழகான தமிழில் அனைவருக்கும் புரியும் வண்ணம் தெளிவாக எழுதுவது இவரது சிறப்பு’ என்றும் உயரிய விருதுகளுக்கு ஒப்பான அங்கீகார வார்த்தைகளுடன் கூடிய பாராட்டுகளை நான் எழுதிய புத்தகங்களின் அட்டைப் படங்களில் வெளிப்படுத்தி கெளரப்படுத்தினார்.

திரு. அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அனிமேஷனில் கொண்டுவரும் அருமையான திட்டத்துக்கு கண்ணதாசன் பதிப்பகத்துடன் இணைந்து முயற்சித்தோம்.

இன்று ஃபேஸ்புக், பிளாக் போன்ற சமூக வலைதளங்களில் புரொஃபைல் பேனர், புரொஃபைல் பிச்சர் போன்றவற்றை மாற்றி மாற்றி போட்டு அழகுபார்க்கும் சூழல். இதுபோன்ற சூழலே இல்லாத 2000-ஆண்டில் அவர் பதிப்பக சுவற்றில் எங்கள் சிறந்த நூலாசிரியர்கள் என்ற தலைப்பிட்டு திரு. ஓஷோ, டாக்டர் அப்துல்கலாம் வரிசையில் என் புகைப்படத்தையும் வரைந்து என்னை கெளரவப்படுத்தினார்.

அன்றும் இன்றும் (என்றும்) என்னை எங்கு பார்த்தாலும் ‘ஹலோ காம்கேர் மேடம் எப்படி இருக்கிறீர்கள்’ என மிக மரியாதையுடன் அழைத்துப் பேசும் பண்பை நான் பலநாள் வியந்திருக்கிறேன். இரண்டு நாட்கள் பார்த்து பேசினாலே பெயர் சொல்லி அழைக்கும் கலாச்சாரத்தில் இருக்கும் நிலையில், கிட்டத்தட்ட 18 வருடங்களுக்கு மேல் தொடர்பில் இருந்தும் அன்று கொடுத்த மரியாதையில் எள்ளளவும் குறையாமல் கொடுத்து வருகிறார்.

டேலி சாஃப்ட்வேருக்கு நான் எழுதிய புத்தகத்துக்கு இன்றும் நல்ல வரவேற்பு இருக்கிறது என்பதை மகிழ்வுடன் பகிர்ந்துகொண்டார்.

‘திறமை இருப்பவர்கள் என்றும் நல்ல நிலைக்கு வருவார்கள்’ என்று அவரிடம் இருந்து வாழ்த்துச் செய்தியைப் பெற்று மனநிறைவுடன் விடைபெற்றேன்.

இன்று(ம்) ஓர் இனிய நாள்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி

செப்டம்பர் 6, 2017

(Visited 214 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon