‘சரஸ்வதி பீடத்தின் சர்வகலா வாணி’ – விருது

 

பிப்ரவரி 6, 2005. வாழ்க்கையில் எனக்கு ஒரு பொன்னான நாள்.

அன்றுதான் குழந்தைகள் தங்கள் பெற்றோருக்கு ஏற்படுத்திக் கொடுக்கும் புகழை ஒத்த ஒரு விருது எனக்குக் கிடைத்தது.

என் நிறுவனத்தில் என்னுடன் இணைந்து பணிபுரிபவர்கள் (Employees) எனக்கு ‘சரஸ்வதி பீடத்தின் சர்வகலாவாணி’ என்று பட்டமளித்து கெளரவித்தார்கள்.

முதன் முதலில் என் நிறுவனத்தில் எனக்குத் தெரியாமல் அனைவரும் சேர்ந்து ‘சர்ப்ரைஸாக’ ஒரு விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்கள். அன்று நான் அலுவலகத்துக்கு வருவதற்கு முன்பே அனைவரும் ஹாலில் கூடியிருந்தார்கள்.

தொலைப்பேசி துறையில் 40 ஆண்டுகால பணிக்குப் பிறகான ஓய்வை அடுத்து என் அப்பா அம்மா இருவரும் காம்கேரில் முக்கியப் பொறுப்பில் ஐக்கியமானதால், அன்று ஒரு டிஸ்கஷனுக்காக அவர்களும் வந்திருந்தார்கள்.

அலுவலகமே விழாக்கோலம் கொண்டிருந்தது எங்களுக்கு ஒரு  ‘சர்ப்ரைஸ்’. நாங்கள் உள்ளே நுழைந்ததும் ஆரவாரத்துடன் கைத்தட்டலுடன் வரவேற்பு.

சாஃப்ட்வேர் துறையில் நிர்வாகியாக மட்டும் இல்லாமல் எழுத்து, மேடை பேச்சு, ஆவணப் படங்கள் இயக்குதல், அனிமேஷன் படைப்புகள், சாஃப்ட்வேர்கள் தயாரித்தல் என பல்துறையில் சிறந்துவிளங்குவதற்காக எனக்கு விருதளிக்க நாங்கள் முடிவு செய்திருப்பதாக ஏகோபித்தக் குரலில் எங்களை மனதார போற்றி வரவேற்றார்கள்.

மற்றுமோர் சர்ப்ரைஸ்.

நான் மிகவும் மதிக்கின்ற என் நலன்விரும்பிகளான வெவ்வேறு துறை சார்ந்த மூன்று சான்றோர்களை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தது ஒரு ஹைலைட். அவர்களைப் பற்றிய சிறு அறிமுகம்.

திரு. பி.வெங்கட்ராமன், திரு. மறைமலை இலக்குவனார், டாக்டர். ஆர். ரவி

திருமிகு. பி. வெங்கட்ராமன்:  புதுக்கோட்டையைச் சேர்ந்த இவர், வடமலை அழகன் என்ற புனைப்பெயர் கொண்டவர். இவர் டி.வி.எ.ஸ். நிறுவனத்தில் நாற்பதாண்டு காலம் நற்பணியாற்றியவர்.  குழந்தை இலக்கியப் பங்களிப்புக்காக பல விருதுகளைப் பெற்ற இவர், எங்கள் பத்மகிருஷ் அறக்கட்டளை வாயிலாக  ஸ்ரீபத்மகிருஷ் விருதையும் பெற்றுள்ளார். இவர் எழுதிய ‘சிறுவர் சிறுமியருக்கான சாலை விதிப்பாடல்கள்’ என்ற புத்தகத்தை எங்கள் காம்கேர் நிறுவனம் வாயிலாக பப்ளிஷ் செய்தோம்.

இவர் குழந்தைக் கவிஞர் அழ வள்ளியப்பா அவர்களின் நெருங்கிய நண்பர். அழ. வள்ளியப்பா அவர்கள் கோகுலத்தில் எடிட்டராக இருந்தபோது என் 12 வயதில் நான் எழுதிய ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்ற என் முதல் கதை வெளியானது குறிப்பிடத்தக்கது.

இவர்  விருப்பப்படி குழந்தைக் கவிஞரின் தேர்ந்தெடுத்தப் பாடல்கள் சிலவற்றை கார்ட்டூன் அனிமேஷன் சிடியாக தயாரித்தோம்.

‘விருதுக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன’ என்ற செய்தியை எந்தப் பத்திரிகையில் பார்த்தாலும், அவற்றை என் கவனத்துக்குக் கொண்டு வந்து நான் மறுத்தாலும் அதிலுள்ள சாதக பாதகங்களை எடுத்துச் சொல்லி என்னை விண்ணப்பிக்க வற்புறுத்துவார். இவருக்கு 80 வயதுக்கும் மேலாகிறது.

டாக்டர் ஆர். ரவி:  இவர் PWD-யில் உயர் அதிகாரியாக பணிபுரிந்தவர். ஒரு டாக்டரேட் செய்துவிட்டு ஜியாலஜியில் அடுத்த டாக்டரேட் செய்து கொண்டிருந்தபோது எனக்கு அறிமுகமானார். என் நிறுவனத்தில் ஜியாலஜி தொடர்பான ஆராய்ச்சி பிராஜெக்ட்டுகளில் இவர் பங்களிப்பு அபாரமானது. அலுவலக நேரம் போக தினமும் மாலை நேரத்தில் இரண்டு மணிநேரம் என் நிறுவன சாஃப்ட்வேர் புரோகிராமர்களுடன்  இவர் நேரத்தை செலவழிப்பார். அவர்களுக்கு ஜியாலஜி குறித்த சந்தேகங்களுக்கு தீர்வளிப்பார்.

மேலும் ஸ்ரீபத்மகிருஷ் அமைப்பின் வாயிலாக நாங்கள் நடத்தும் தொழில்நுட்ப வாழ்வியல் கருத்தரங்குகளில் இவரும் ஒரு சிறப்புப் பேச்சாளர்.

சாந்தம், பொறுமை, அமைதி, நேர்மை, நாணயம், கடுமையான உழைப்பு போன்ற உயரிய நற்பண்புகளைப் பெற்ற இவருக்கு 55 வயதுக்கும் மேலாகிறது.

திருமிகு. மறைமலை இலக்குவனார்: 70 வயதுக்கு மேலாகும் இவருடைய அறிமுகம் 2001-ம் ஆண்டு ஒரு போன் கால் மூலம் இன்ப அதிர்ச்சியாக கிடைக்கப் பெற்றேன்.

‘நான் பிரசிடென்சி கல்லூரியில் தமிழ்த்துறை  பேராசியராக உள்ளேன். உங்கள் இரண்டு புத்தகங்களை எங்கள் சென்னை பல்கலைக்கழக பிரசிடென்சி கல்லூரிக்காக எம்.ஏ தமிழ்துறைக்கு பாடதிட்டமாக தேர்ந்தெடுத்துள்ளோம்…’

முதன்முதலில் எங்கள் காம்கேர் மூலம் நாங்கள் பப்ளிஷ் செய்திருந்த ‘இவ்வளவுதான் கம்ப்யூட்டர் – For Beginers’, ‘இவ்வளவுதான் கம்ப்யூட்டர் – இன்டர்நெட் எல்லோருக்கும்’ என்ற இரண்டு புத்தகங்களும் பல்கலைக்கழக பாடதிட்டத்தில். 30 வயதில் நான் எழுதி என் நிறுவனம் மூலம் பப்ளிஷ் செய்த புத்தகங்கள் பல்கலைக்கழக சிலபஸில். திறமைக்கும் உழைப்புக்கும் கிடைத்த வெற்றி.

அதன்பிறகு பல பல்கலைக்கழகங்களில் எங்கள் நிறுவனம் மூலம் நான் எழுதிய புத்தகங்கள் பாடதிட்டத்தில் சிலபஸாக வருவதற்கும், பல புத்தகங்களை ஆங்கிலத்தில் எழுதி பப்ளிஷ் செய்துகொடுப்பதற்கும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இவர் மூலம் கிடைத்த அறிமுகம் அஸ்திவாரமானது.

எங்கள் காம்கேரின் ஆகச்சிறந்த படைப்பான ‘கந்தர் சஷ்டிக் கவசம்’ கார்ட்டூன் அனிமேஷன் சிடியை, பாடல் மற்றும் உரையுடன் நாங்கள் தயாரித்தபோது, என்னுடன் இணைந்து உரை எழுதி பின்னணி குரலும் கொடுத்துள்ளார்.

நாங்கள் நடத்தும் தொழில்நுட்ப வாழ்வியல் கருத்தரங்குகளில் இவரும் ஒரு சிறப்புப் பேச்சாளர்.

இவர்களின் சிறப்புரைக்குப் பிறகு ‘கேள்வி-பதில்’ நிகழ்ச்சி. என் ஸ்டாஃப் என்னையும், என் அப்பா அம்மாவையும் கேள்விகள் கேட்க நாங்கள் பதிலுரைத்துக்கொண்டே வந்தோம்.

இந்த நிகழ்ச்சியில் ஒரு ஸ்டாஃப் கேட்ட கேள்வியும், என் அப்பாவின் பதிலும் அனைவரையும் கவர்ந்ததோடு எல்லா காலத்துக்கும் தேவையானதாக அமைந்தது.

‘சார், அலுவலகங்களில் பார்ட்டி நடக்கும்போது மது அருந்தவும்   கட்டாயம் ஏற்பட்டிருக்கும். அப்போது நீங்கள் என்ன செய்தீர்கள்?’ இது கேள்வி.

‘ஒருவன் ஒரு செயலை செய்கிறான் என்றால் அது அவனுக்கு பிடித்திருந்தால் மட்டுமே செய்ய முடியும். உதாரணத்துக்கு மாமிசமே உண்ணாதவர்கள் அதை சாப்பிட யார் கட்டாயப்படுத்தினாலும் நிச்சயமாக சாப்பிட முடியாதல்லவா?

அதுபோலதான் மதுவும், சிகரெட்டும். மது அருந்த வேண்டும், சிகரெட் பிடிக்க வேண்டும் என்ற ஆர்வமும் ஆசையும் மனதுக்குள் இருப்பவர்களால் மட்டும்தான் அவற்றை செய்ய முடியும். சுயக்கட்டுப்பாடு இருப்பவர்கள் யாரும் இவற்றை செய்ய மாட்டார்கள்.

எங்கள் அலுவகத்தில் எத்தனையோ சந்தர்பங்களில் உயர்மட்ட பார்ட்டிகளின்போது  எவ்வளவோபேர் மது அருந்தும் போதுகூட நான் அருந்தாமல் சுயகட்டுப்பாட்டோடு இருந்திருக்கிறேன்’ – இது என் அப்பாவின் பதில்

அடுத்ததாக எனக்கு விருதளிக்கும் நிகழ்வு.

திரு.பி.வெங்கட்ராமன் அவர்கள் வாழ்த்துரை படித்து, ஆளுயர அவார்ட்  போர்டை சிலை திறக்கும் வைபவத்தைப் போல திறந்து வைத்தார்.

அசத்தலான வார்த்தைகளில், அம்சமான வடிவமைப்பில், எனக்கு மிகவும் பிடித்த ஆரஞ்ச் கலர் காம்பினேஷனில் என் புகைப்படத்தையும்  ‘சரஸ்வதி பீடத்தின் சர்வகலா வாணி’ என்ற வார்த்தைகளையும்  பார்க்கக்கூட முடியாத அளவுக்கு கண்களை கண்ணீர் மறைத்தது.

ஏற்புரையில் அனைவருக்கும் நன்றி சொல்லி நிகழ்ச்சியை நிறைவு செய்தோம். அடுத்து அனைவருக்கும் விருந்தோம்பல் வடபழனி சரவணபவனில்.

அன்றைய பொழுதின் மகிழ்ச்சியும் மனநிறைவும் இனி வாழ்நாளில் என்றாவது கிடைக்குமா என்பது சந்தேகமே.

2017 – எங்கள் காம்கேரின் சில்வர் ஜூப்லி ஆண்டில் இருக்கும் இந்த நேரத்தில், எனக்கு எத்தனையோ வாழ்த்துக்களும், விருதுகளும், கெளரவங்களும் கிடைத்திருந்தாலும், இந்த விருது கிடைத்த இனிய நினைவலைகளுடன் காம்கேரின் அடுத்தகட்ட பயணத்துக்குத் தயாராகிறேன்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி

அக்டோபர் 10, 2017

(Visited 22 times, 1 visits today)