ஹலோ With காம்கேர் -81:  ஒரு நாள் விரதம் இருக்க ஏன் இத்தனைப் பதட்டம்?

ஹலோ with காம்கேர் – 81
March 21, 2020

கேள்வி:  ஒரு நாள் விரதம் இருக்க ஏன் இத்தனைப் பதட்டம்?

கொரோனா நோய் தொற்றைத் தடுக்கும் வகையில் மார்ச் 22-ந் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை சுய ஊரடங்கை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பலதரப்பட்ட கருத்துக்கள்.

டிவி, இன்டர்நெட், ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர், டிக்டாக் ஸ்மார்ட்போன் இத்தியாதி இத்தியாதிகள் நம்மை சூழ்ந்திருக்க எது நம்மை தனிமைப்படுத்திவிடப் போகிறது. தவிர வீடுகொள்ளா மனிதர்கள். கலகலப்புக்கு கேட்கவா வேண்டும். இதையும் கொண்டாடித்தான் பார்ப்போமே.

பூஜைகளும் விரதங்களும் நம்பிக்கைகளும் சாஸ்திரங்களும் சம்பிரதாயங்களும் இரத்தத்தில் ஊறிப்போன நம் ஜீன்களில் அதன் சுவடுகள் அத்தனை எளிதில் நீங்கிவிடவா போகிறது. ஒரு நாள் விரதம் போலதான் ஒருநாள் ஊரடங்கு. பதட்டப்பட அவசியமில்லை.

சில வருடங்களுக்கு முன்னர் வேற்றுமொழி திரைப்படம் ஒன்று பார்த்தேன். திரைப்படத்தின் பெயரும் எந்த மொழி என்பதும் நினைவில் இல்லை.

கணவனைப் பிரிந்து தனித்து வாழும் ஓர் அம்மா மூன்றாம் வகுப்புப் படிக்கும் தன் மகன் அபிலேஷை முழு ஆண்டு தேர்வுக்குப் பிறகான விடுமுறைக்கு அவனை தனியாக வீட்டில் தங்க வைக்க முடியாது என்பதால் தன் பாட்டியின் வீட்டில் அதாவது அவன் கொள்ளு பாட்டி வீட்டில் கொண்டு விடுகிறாள். பாட்டிக்குத் துணையாக இருக்கும் நாய்குட்டி ஒன்று வாலை ஆட்டியபடி வரவேற்றது. வீடு மலைப் பிரதேசத்தில் இயற்கை சூழலில் இருந்தது.

அவனுக்குத் தேவையான விளையாட்டுப் பொருட்கள், தின்பண்டங்கள், இண்டர்நெட் வசதியுடன் மொபைல் போன், படம் வரைவதற்கான ஓவியப் புத்தகம், படிப்பதற்கு காமிக்ஸ்  இப்படி அனைத்தையும் கொடுத்துவிட்டு ‘பாட்டியை படுத்தாமல் சமர்த்தாக இருக்க வேண்டும்’ என்று அறிவுரை சொல்லிவிட்டுச் செல்கிறாள்.

பாட்டி மிகவும் வயதானவர். தோல் சுருங்கி கண்கள் இடுங்கி பல்லே இல்லாமல் பேசுவது புரியாமல் கசங்கிய புடவை கட்டிக்கொண்டு இருக்கும் பாட்டியை ஏனோ அபிலேஷுக்கு பிடிக்கவே இல்லை. நல்ல வேளையாக  பாட்டியின் நாய்குட்டியை பிடித்துப்போய் விடுகிறது அவனுக்கு.

அவன் வசதியாக வளர்ந்தவன் என்பதால் பாட்டி அவனுக்காகவே ஒரு பயன்படுத்திய பழைய டேபிள் ஃபேன் வாங்கி வருகிறார். தன் புடவைகளை மெத்தையாக்கி தூங்க வைக்கிறார். அவர் அன்பாக பக்கத்தில் வந்தாலே தள்ளி படுக்கிறான். அவர் பால் கலந்துகொடுத்தால் கைகளில் வாங்காமல் கீழே வைக்கச் சொல்லி கீழிறிருந்து எடுத்து குடிக்கிறான்.

அவனுக்குப் பிடித்ததாக பார்த்துப் பார்த்து அவர் சமைத்து கொடுக்கும் சமையலை விரும்பி சாப்பிடாமல் ஒதுக்கி வைக்கிறான்.

இன்டர்நெட் இணைப்பு பாதி நேரம் கிடைப்பதில்லை. மொபைல் சிக்னலும் விட்டு விட்டுதான் வருகிறது. இன்டர்நெட் இணைப்பு இருந்தால் மட்டுமே விளையாடும் கேம்ஸ்களை விளையாட முடியாமல் கோபம் கோபமாக வருகிறது அபிலேஷுக்கு. பாட்டி ஏதேனும் பேசினால் எரிச்சலில் கத்துகிறான். எத்தனை நேரம்தான் வரைவது. எத்தனை நேரம்தான் காமிக்ஸ் படிப்பது.

பாட்டி சுள்ளி பொறுக்கி எடுத்து வந்துதான் சமையல் செய்கிறார். தினமும் அவருடன் அபிலேஷும் செல்வான். கல் மண் காடு மேடு என அவருடன் சுற்றும்போது கால் வலிக்கும். கூன் விழுந்த தன் முதுகில் அவனை தூக்கிச் செல்வார். பாட்டியின் உடம்பில் இருந்து வரும் வியர்வை வாடை அவனுக்கு பிடிக்கவில்லை என்றாலும் வேறு வழியில்லாமல் அவருடன் செல்வான்.

ஒரு நாள் அபிலேஷின் காலில் செருப்பு அறுந்துவிட பாட்டி தன் செருப்பை அவனுக்குக் கொடுத்துவிட்டு தான் வெறும் காலுடன் நடந்து வருகிறார்.

வீட்டுக்கு வருவதற்குள் கல்லும் முள்ளும் குத்தி அவருடைய இரண்டு பாதங்களிலும் இரத்தம். எண்ணெய் வைத்து துடைத்துக்கொள்கிறார். இதையெல்லாம் அபிலேஷ் பார்த்துக்கொண்டிருக்கிறானே தவிர ‘பாட்டி…’ என அன்பாய் பேச மாட்டேன் என்கிறான்.

அவன் அங்கிருந்த இரண்டு வார காலமும் இப்படியே செல்கிறது. பாட்டியும் விடாமல் அவனிடம் அன்பு செலுத்துகிறாள். அவனும் விலகி விலகி செல்கிறான்.

விடுமுறை முடிந்து அபிலேஷை அழைத்துச் செல்ல அவன் அம்மா வருகிறாள். எல்லாவற்றையும் எடுத்து வைத்துக்கொண்டு பஸ்ஸில் ஏறும்வரை அவன் அம்மா எத்தனை சொல்லியும் பாட்டியிடம் பேசவே  இல்லை அபிலேஷ். நாய்குட்டியை பாசத்துடன் அணைத்து அன்புடன் விடைபெறுகிறான்.

பாட்டியும் பஸ்ஸின் ஜன்னல் வழியாக கூன் விழுந்த தன் முதுகை எக்கி எக்கி அவன் முகத்தை வாஞ்சையுடன் கண்களில் கண்ணீர் மல்க பார்த்துக்கொண்டே இருக்கிறார்.

பஸ் கிளம்புகிறது. கொஞ்ச தூரம் சென்றதும் பஸ்ஸின் ஜன்னல் வழியாக அபிலேஷ் எட்டிப் பார்த்து  ‘பாட்டி டாடா’ என கையை ஆட்டுகிறான்.

பாட்டியின் கண்களில் ஆனந்த கண்ணீர். படம் முடிவடைகிறது.

ஒருநாள் ஊரடங்கு, 15 நாட்கள் வீட்டில் இருந்தே வேலை என்றதும் ஏனோ இந்த திரைப்படம் நினைவில் வந்தது.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 9 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari