ஹலோ With காம்கேர் -139: என் பதிலுக்கென்ன கேள்வி, இதென்ன புதுசா இருக்கே?

ஹலோ with காம்கேர் – 139
May 18, 2020

கேள்வி: என் பதிலுக்கென்ன கேள்வி, இதென்ன புதுசா இருக்கே?

நம் எல்லோருக்குமே ஏராளமான வாய்ப்புகள் நம் முன் விரிந்து கிடக்கின்றன. நம்மால்தான் நமக்கு என்ன தேவை என்பதை நமக்குள்ளேயே கேட்டுத் தெளிவு பெறும் திறன் இல்லையோ என நான் அடிக்கடி நினைத்துக் கொள்வதுண்டு.

வாய்ப்புகளை பதில்கள் எனவும், தேவைகளை கேள்விகள் எனவும் வைத்துக் கொள்வோம்.

ஒரு சிலர் கோயிலுக்குச் சென்று இறைவனிடம் வேண்டிக் கொள்ளும்போதுகூட ஒன்றுடன் ஒன்று முடிச்சு போட்டு தங்கள் தேவைகளை சிக்கலாக்கி எல்லாவற்றையும் போட்டுக் குழப்பி பிரார்த்திப்பார்கள். என்ன வேண்டிக்கொண்டோம் என்று அவர்களுக்கே தெரியாது. புரியாது. அத்தனை தேவைகள். அத்தனை எதிர்பார்ப்புகள்.

அடிப்படையில் அவர்களுடைய பிரச்சனைகளின் தொடக்கப் புள்ளியை ஆராய்ந்து அதை சரி செய்துகொண்டாலே மற்றவை ஒன்றன் பின் ஒன்றாக தீர்ந்துவிடும். அது தெரியாமல் எல்லாவற்றையுமே சிக்கலாக்கி  பிரச்சனைகளாக்கி பூதாகரமாக்கிப் பார்க்கும் மனநிலையால் உண்டாகும் சிக்கல் அது.

‘வெள்ளைப் பூக்கள்’ என்றொரு திரைப்படம். அமெரிக்காவில் சியாட்டிலில் எடுத்திருக்கிறார்கள். விவேக் போலீஸ் அதிகாரியாக வருகிறார்.

அவர் அடிக்கடி ஒரு வாசகத்தைப் பயன்படுத்துகிறார்.  ‘பதில்கள் இருக்கின்றன. கேள்விகளை சரியாகக் கேட்டால் தீர்வு கிடைத்துவிடும்’ என்று சொல்லி கற்பனையிலேயே தான் துப்பறிவதை செயல்படுத்திப் பார்க்கிறார். அவர் உணர்ந்த, துப்பறிந்த விஷயங்களை  நிஜத்தில் கதாபாத்திரங்களிடம் கேள்விகளாகக் கேட்டு தீர்வு காண்கிறார்.

பதில்களை வைத்தே கேள்விகளை உருவாக்கும் அந்த கான்செப்ட் மிகப் பெரிய உளவியை சொல்லிச் செல்கிறது.

ஓர் உண்மை சம்பவம் நினைவுக்கு வருகிறது.

ஒரு பள்ளியில் மாணவர்களிடம் ஆசிரியர் ஒரு கேள்வியை கேட்கிறார்.

‘எதிர்காலத்தில் என்னவாக வர ஆசைப்படுகிறீர்கள்?’ இதுதான் கேள்வி.

ஒவ்வொரு மாணவனும் ஒவ்வொரு பதிலை சொல்கிறார்கள்.

‘டாக்டர் ஆகணும்’

‘இன்ஜினியர் ஆகணும்’

‘புரொஃபசர் ஆகணும்’

‘பிசினஸ் மேன் ஆகணும்’

இப்படி ஒவ்வொரு மாணவனும் ஒவ்வொன்றாகச் சொல்ல ஒரு மாணவன் மட்டும் ‘பணக்காரன் ஆகணும்’ என்று சொல்ல ஆசிரியர் ஆச்சர்யமாக அவனைப் பார்த்து ‘ஏன் இப்படி ஆசைப்படுகிறாய், பணம்தான் வாழ்க்கை என நினைத்துக்கொண்டிருக்கிறாயா?’ என கேட்கிறார்.

அதற்கு அந்த மாணவன், ‘ஆமாம் சார், நான் எதிர்காலத்தில் ஒரு காப்பகம் தொடங்கவே விரும்புகிறேன். அதில் அப்பா அம்மா இல்லாத குழந்தைகளையும், குழந்தைகள் இல்லாத அப்பா அம்மாக்களையும் சேர்த்துக்கொள்ள ஆசைப்படுகிறேன். என்னுடைய அம்மா அதற்கெல்லாம் நிறைய பணம் வேண்டும் அதெல்லாம் ரொம்ப பெரிய விஷயம் என்று சொல்கிறார். அப்போ பணக்காரன் ஆனால்தானே என்னால் காப்பகம் நடத்த முடியும். அதனால்தான் நான் எதிர்காலத்தில் பணக்காரன் ஆக ஆசைப்படுகிறேன்…’ என்று சொல்ல ஆசிரியர் வாயடைத்துப் போனார். மாணவனின் புத்திசாலித்தனத்தை நினைத்து வியந்தார்.

இந்த மாணவனுக்கு தனக்கு என்ன தேவை, அதனை அடைய என்ன செய்ய வேண்டும் என்ற இரண்டிலுமே தெளிவு இருக்கிறது. தன் முன் குவிந்து கிடக்கும் பதில்களில் இருந்து தனக்குப் பொருத்தமான பதில்களைத் தேர்ந்தெடுக்கும் சூட்சும அறிவும் இருக்கிறது. நடக்குமா நடக்காதா என்பதெல்லாம் அடுத்த விஷயம்.

அவன் விருப்பப்படி பணக்காரனாக படிக்கத்தான் போகிறான், அதற்கேற்ப வேலைக்குச் செல்லத்தான் போகிறான் அல்லது சொந்தமாக தொழில் தொடங்கத்தான் போகிறான். சர்வ நிச்சயமாக பணமும் சம்பாதிக்கத்தான் போகிறான். எல்லாமே அவனது குறிக்கோளான காப்பகம் தொடங்குவது என்ற குறிக்கோளின் கீழேயே வந்துவிடும். அதை நோக்கியே அவனது பயணமும் அமையும்.

தனக்கு இது வேண்டும் என்கின்ற பதிலிலும், அதை அடைய என்ன செய்ய வேண்டும் என்கின்ற கேள்வியிலும் தெளிவு இருந்துவிட்டால் பெரும்பாலும் நம் ஆசைகள், கனவுகள், இலட்சியங்கள் தோற்றுப் போவதே இல்லை.

தனக்கு முன் உள்ள வாய்ப்புகளில் (பதில்கள்) இருந்து தனக்கு என்ன வேண்டும் என்பதையும் (கேள்வி), அதனை அடைய என்ன செய்ய வேண்டும் என்பதையும் (கேள்வி) கேட்டுத் தெளிவு பெறும் திறமையை இளம் வயதிலேயே பெறுபவர்கள் எதிர்காலத்தில் அவர்கள் குறிக்கோளில் வெற்றி பெறுகிறார்கள்.

அதனால் கேள்விகளுக்கு பதில்களைத் தேடாமல், பதில்களுக்கு கேள்விகளைத் தேடுவோமே! இதுவும் ஒரு புது யுக்தித்தானே?

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 12 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari